ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.


பஞ்சாப் - ஐதராபாத் மோதல்:


நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.


நடப்பு தொடரில் இதுவரை:


நடப்பு சீசனை பொறுத்தவரை சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியை கண்டுள்ளது. அதேசமயம் பஞ்சாப் அணி முதல் ஆட்டத்தில் டக் வொர்த் லூயிஸ் முறைப்படி 7 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 5  ரன்கள் வித்தியாசத்திலும் வென்றது.  இதன் மூலம் ஹாட்ரிக் வெற்றிக்காக பஞ்சாப் அணியும் , ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்ய  ஐதராபாத் அணியும் முயலும் என்பதால் இப்போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பஞ்சாப் அணி நிலவரம்:


பஞ்சாப் அணியை பொறுத்தவரையில் ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான், சாம் கர்ரன் ஆகியோர் பேட்டிங்கில் நம்பிக்கை அளித்து வருகின்றனர். நாதன் எல்லிஸ், ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங் ஆகியோரை தான் பந்துவீச்சில் நம்ப வேண்டி உள்ளது. இந்தியாவை சேர்ந்த நட்சத்திர பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லாதது பஞ்சாப் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.


ஐதராபாத் நிலவரம்:


ஐதராபாத் அணியில் மயங்க் அகர்வால், அன்மோல்பிரீத் சிங், ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம் (கேப்டன்) , ஹாரி புரூக், வாஷிங்டன் சுந்தர் போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்தாலும், அவர்கள் தங்கள் மீதான எதிர்பார்ப்பை இதுவரை பூர்த்தி செய்யவில்லை. பேட்ஸ்மேன்கள் ஓரளவிற்கு ரன்களை சேர்த்தால் தான், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், அடில் ரஷித், உம்ரான் மாலிக் ஆகிய தரமான பந்துவீச்சாளர்கள் தங்களது திறனை வெளிப்படுத்த முடியும்.


இதுவரை நேருக்கு- நேர்: 


பஞ்சாப் - ஐதராபாத் அணிகள் இதுவரை 20 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், இதில் 13 ஆட்டங்களில் ஐதராபாத் அணியே வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணி 7 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. அதிகப்பட்சமாக ஐதராபாத் அணி 212 ரன்களும், குறைந்த பட்சமாக 114 ரன்களையும் பஞ்சாப் அணிக்கு எதிராக பதிவு செய்துள்ளது. பஞ்சாப் அணி 211 ரன்களை அதிகப்பட்சமாகவும், குறைந்தப்பட்சமாக 119 ரன்களையும் பதிவு செய்துள்ளது. கடந்தாண்டு நடந்த இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றன.


மைதானம் எப்படி?


ஐதராபத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இதுவரை விளையாடிய 46 ஐபிஎல்  போட்டிகளில் 29 போட்டிகளில் ஐதராபாத் அணி  வெற்றி கண்டுள்ளது. இங்கு மொத்தம் 65 ஐபிஎல்  போட்டிகள் நடந்துள்ளன. இதில் இரண்டாவதாக பேட் செய்த அணிகள் 37 முறை வெற்றி பெற்றுள்ளன.