ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஏன் களமிறங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.


டாஸ் வென்ற குஜராத்:


நடப்பாண்டு ஐ.பி.எல். தொடரின் 13வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்த்ர மோடி மைதானத்தில் மோதிக் கொள்கின்றன. இதில் நடப்புச் சாம்பியனான குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இன்று களமிறங்கவில்லை. இதன் காரணமாக சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான், குஜராத் அணியின் கேப்டனாக செயல்படுகிறார். ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் களமிறங்கிய குஜராத் அணி கேப்டன் ரஷீத்கான், டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 


பாண்ட்யாவிற்கு என்ன ஆச்சு?


டாஸிற்கு பிறகு பேசிய ரஷீத் கான் ”பாண்ட்யாவிற்கு சற்றே உடல்நிலை சரியில்லை. இந்த சூழலில் அவரை களமிறக்க நாங்கள் விரும்பவில்லை. எனவே, அவருக்கு மாற்றாக இந்த போட்டியில் மற்றொரு ஆல்-ரவுண்டரான விஜய் சங்கர் விளையாடுவார்” என தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல்  தொடர் தொடங்கி சில போட்டிகள் மட்டுமே முடிந்துள்ளன. இன்னும் பல போட்டிகள் எதிர்வர உள்ளதால், உடல்நிலை சரியில்லாத பாண்ட்யாவை களமிறக்க வேண்டாம் என குஜராத் அணி முடிவெடுத்துள்ளது. பிளே- ஆஃப் சமயங்களில் ஹர்திக் பாண்ட்யா இருப்பது குஜராத் அணிக்கு மிகவும் அவசியமாகும். அதேநேரம், அடுத்த போட்டிக்கு அவர் திரும்புவாரா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


நடப்பு தொடரில் பாண்ட்யா:


கடந்த சீசன் மூலம் ஐபிஎல் தொடரில் முதன்முறையாக களமிறங்கிய குஜராத் அணி, ஹர்திக் பாண்ட்யா தலைமையில் முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அசத்தியது. கடந்த தொடரில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டதோடு, 222 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டுகளை எடுத்து சிறந்த ஆல்-ரவுண்டராகவும் ஜொலித்தார். ஒரு போட்டியில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஐபிஎல் தொடரில் அவரது சிறப்பான பந்துவீச்சாகும்.  நடப்பு தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, விக்கெட் ஏதும் வீழ்த்தாமல் 13 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரை 109 போட்டிகளில் விளையாடியுள்ள பாண்ட்யா, ஆயிரத்து 581 ரன்களை சேர்த்து 50 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 


குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்


விருத்திமான் சாஹா(விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சாய் சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா, அபினவ் மனோகர், ரஷித் கான்(கேப்டன்), முகமது ஷமி, அல்சாரி ஜோசப், யாஷ் தயாள்


குஜராத் டைட்டன்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்: 


ஜெயந்த் யாதவ், ஸ்ரீகர் பாரத், மோஹித் சர்மா, மேத்யூ வேட், ஜோசுவா லிட்டில்