பென்ஸ்டோக்ஸ் மற்றும் தீபக்சாஹருக்கு ஏற்பட்ட காயம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னைசூப்பர்கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இருவரும் காயங்களால் அவதிப்பட்டு வருவது உறுதியாகியுள்ளது.


பென்ஸ்டோக்ஸ், தீபக் சாஹர்:


இதுதொடர்பான அறிவிப்பில் ”சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் பென் ஸ்டோக்ஸ் கால் விரலில் ஏற்பட்ட சிறிய காயத்தால், மும்பை வான்கடே மைதானத்தில் சனிக்கிழமை அன்று  மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் பங்கேற்கவில்லை. ஸ்டோக்ஸ் ஐபிஎல் 2023 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸின் முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடினார், மூன்றாவது ஆட்டத்திற்கு முன்னதாக பயிற்சியின் போது கால் விரலில் காயம் ஏற்பட்டது,   


இதேபோன்று, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது தீபக் சாஹரின் தொடை தசையில் காயம் ஏற்பட்டது. இதனால் ஒரு ஓவரை மட்டுமே வீசிய நிலையில் அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.  அணி சென்னை திரும்பியதும் காயத்தின் அளவை அடையாளம் காண சாஹருக்கு ஸ்கேன் செய்யப்படும்.  சென்னை சூப்பர் கிங்ஸ் மருத்துவ ஊழியர்கள் பென் ஸ்டோக்ஸ் மற்றும் சாஹரை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர், மேலும் அவர்கள் குணமடைய தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவார்கள்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.


நடப்பு தொடரில் சென்னை அணி:


நடப்பு தொடரில் ஏற்கனவே சென்னை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட முகேஷ் சவுத்ரி மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோர் காயம் காரணமாக நடப்பு தொடரில் இருந்து விலகியுள்ளனர். அவர்களுக்கு மாற்றாக ஆகாஷ் சிங் மற்றும் சிசந்தா மகலா அகியோரை ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில் சென்னையின் பிளேயிங் லெவனில் கட்டாயம் இடம்பெறும் பென் ஸ்டோக்ஸ் மற்றும் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டு இருப்பது, அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இவர்களுக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தாக்கத்தை பொருத்தே அடுத்த போட்டிகளில் இவர்கள் பங்கேற்பர்களா அல்லது தொடரிலிருந்தே விலகுவார்களா என்பது உறுதியாகும், ஏனேனில் நடப்பாண்டு இறுதியில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெறுவதால், பென் ஸ்டோக்ஸ் எந்தவித ஆபத்தான முடிவையும் எடுக்கமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.


சென்னை அணி நிலவரம்:


நடப்பு தொடரில் சென்னை அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ளது. முதல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக தோல்வியை தழுவினலும், லக்னோ மற்றும் மும்பை அணிக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்றது. இதன் மூலம், புள்ளிப்பட்டியலில் தற்போது சென்னை அணி நான்காவது இடத்தில் உள்ளது. இதையடுத்து வரும் 12ம் தேதி ராஜஸ்தான் அணிக்கு எதிராக, சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி களமிறங்க உள்ளது.