நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மார்க்ரம் தலைமையிலான ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
நடப்பு தொடரில் இதுவரை:
நடப்பு சீசனை பொறுத்தவரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியை கண்டுள்ளது. அதேசமயம் பஞ்சாப் அணி முதல் ஆட்டத்தில் டக் வொர்த் லூயிஸ் முறைப்படி 7 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்திலும் வென்றது. இதன் மூலம் ஹாட்ரிக் வெற்றிக்காக பஞ்சாப் அணியும் , ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்ய ஐதராபாத் அணியும் முயலும் என்பதால் இப்போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணியினர் இன்றைக்கு தங்கள் அணிக்கு இப்படியான மோசமான நிலை உருவாகும் என எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். போட்டியின் முதல் பந்தில் பஞ்சாப் அணியின் முதல் விக்கெட் விழுந்தது. அதன் பின்னர் இரண்டாவது ஓவரில் மேலும் ஒரு விக்கெட்டை பஞ்சாப் அணி இழந்தது. அதன் பின்னர் களத்துக்கு வந்த சாம் கரன் 4வது ஓவரில் தனது விக்கெட்டை இழக்க பஞ்சாப் அணி தடுமாற தொடங்கியது. பவர்ப்ளே முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் சேர்த்து இருந்தது.
இம்பேக்ட் ப்ளேயராக பஞ்சாப் அணியின் சார்பில் ரஸா களமிறக்கப்பட்டார். அவரும் ஏமாற்ற, பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தவித்தது. விக்கெட்டுகள் ஒரு புறம் இழந்தாலும், பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் மட்டும் நிலையான மற்றும் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். அவர் 42 பந்தில் தனது அரைசதத்தினை பூர்த்தி செய்தார். ஷிகர்தவானின் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப் அணி 100 ரன்களை எட்டியது. இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. ஷிகர் தவான் 66 பந்தில் 99 ரன்கள் எடுத்து ஒரு ரன்னில் சதத்தினை தவறவிட்டார். இதில் 12 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் பறக்கவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 99 ரன்கள் மூலம் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் முதல் இடத்திற்கு சென்று ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றியுள்ளார். இவர் இதுவரை இந்த தொடரில் 3 போட்டிகளில் 2 அரைசதம் உள்பட 225 ரன்கள் சேர்த்துள்ளார். இவரது விக்கெட்டை வீழ்த்த ஹைதராபாத் அணியினர் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் இவரது விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் அணியின் சார்பில் மார்கண்டேயா 4 விக்கெட்டுகளும், மார்கோ ஜான்சன் மற்றும் உம்ரான் மாலிக் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.