ஐபிஎல் 2022 தொடர் அடுத்த மாதம் இறுதியில் மகராஷ்டிராவில் தொடங்க உள்ளது. இந்தத் தொடருக்கு முன்பாக வீரர்கள் ஏலம் கடந்த 12 மற்றும் 13ஆம் தேதிகளில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12.25 கோடி ரூபாய்க்கு இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை  எடுத்தது. 


 


இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கே.கே.ஆர் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அணியின் கேப்டன் பதவியை ஏற்றுக் கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர், "கேகேஆர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. ஐபிஎல் தொடரில் எப்போதும் பல நாட்டு வீரர்கள் சேர்ந்து விளையாடுவதால் நல்ல அனுபவத்தை தரும். ஆகவே அந்தத் தொடரில் அணியை வழி நடத்த ஆவலாக இருக்கிறேன். என்னை கேப்டனாக நியமித்த அணி நிர்வாகம், அணி உரிமையாளர்கள் ஆகியோருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார். 


 






ஸ்ரேயாஸ் ஐயர் 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் பாதியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிகவும் குறைவான வயதில் கேப்டன் பதவியை ஏற்றவர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்று இருந்தார். இவர் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றார்.  2020 தொடரில் இவர் 17 போட்டிகளில் 519 ரன்கள் அடித்திருந்தார். இதன்காரணமாகவே டெல்லி அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. 


2021ஆம் ஆண்டு இவருக்கு தோள்பட்டை காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் 2021 ஐபிஎல் தொடரில் விளையாட முடியவில்லை. டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டிருந்தார். 2021ஆம் ஐபிஎல் தொடருக்கு பிறகு டெல்லி அணி ஸ்ரேயாஸ் ஐயரை தக்கவைக்கவில்லை. ஆகவே இவரை ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எடுத்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: "கட்டிப்பிடித்து 'சாரி' சொன்னார் ரிஷப் பண்ட்" : டெல்லியில் இருந்து லக்னோ அணிக்கு சென்ற ஆவேஷ்!