ஐபிஎல் 15-வது சீசனுக்கான மெகா ஏலம் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் நடந்தன. இந்த சீசனில் லக்னோ மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் புதிதாக ஆடுகின்றன. எனவே மொத்தம் 10 அணிகளும் சேர்ந்து மொத்தமாக 551.7 கோடி கொடுத்து 204 வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளனர். அதிகபட்சமாக இஷான் கிஷனை ரூ.15.25 கோடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. தீபக் சாஹருக்கு ரூ.14 கோடி கொடுத்தது சிஎஸ்கே. ஷ்ரேயாஸ் ஐயரை கேகேஆர் அணி ரூ.12.25 கோடிக்கு எடுத்தது. வெளிநாட்டு வீரர்களை பொறுத்தமட்டில் இங்கிலாந்து பேட்டிங் ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோனை ரூ.11.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. இந்த ஏலத்தில் அதிகபட்ச தொகைக்கு விலைபோன வெளிநாட்டு வீரர் இவர்தான்.


இவருக்கு அடுத்தபடியாக இலங்கையின் வனிந்து ஹசரங்கா ரூ.10.75 கோடி என்ற 2வது அதிகபட்ச தொகைக்கு விலைபோனார். டெல்லியில் கடந்த வருடம் பந்துவீச்சில் கவனிக்க வைத்த வீரர் ஆவேஷ் கானை லக்னோ போட்டி போட்டு 10 கோடிக்கு எடுத்தது. இவர் அன்கேப்டு வீரர்கள் லிஸ்டில் அதிக விலைக்கு போனவர் என்ற பெருமையை பெற்றார்.






அவர் சமீபத்தில் ஒரு ஸ்போர்ட்ஸ் இதழுக்கு கொடுத்த பேட்டியில், "கடந்த ஆண்டு டெல்லி அணி கேப்டனாக இருந்த பந்த், இந்த வருடம் ஆவேஷ் கானை ஏலத்தில் திரும்ப வாங்க முடியாமல் போனதற்கு, "சாரி" எனக்கூறி கட்டிப்பிடித்ததாக கூறினார். “விமானம் கொல்கத்தாவில் தரையிறங்கிய பிறகு, நான் ரிஷப்பை விமான நிலையத்தின் வெளியே சந்தித்தேன், அவர் என்னைக் கட்டிப்பிடிப்பதற்காக அவரது கைகளை விரித்தார். அவர் என்னிடம், ‘மன்னிக்கவும், உன்னை மீண்டும் ஏலத்தில் எடுக்க முடியாமல் போய்விட்டது' என்றார். ஏனெனில், அணியிடம் போதுமான பணமும் மீதம் இல்லை, அதுமட்டுமின்றி அதன் பிறகு வாங்குவதற்கு வீரர்களும் இருந்தனர். நான் ஏலத்தைப் பார்த்தபோது, ​​அவர்கள் எனக்காக 8.75 கோடி வரை இறுதி ஏலம் கேட்டதை கண்டேன், ஆனால் லக்னோ அதைவிட அதிகபட்சமாக ஏலம் எடுத்தது,” என்று அவேஷ் கூறினார்.






உள்ளூர் கிரிக்கெட்டில் மத்திய பிரதேசத்திற்காக விளையாடும் வலது கை வேகப்பந்து வீச்சாளர், இது தனக்கு ஒரு "உணர்ச்சிகரமான" தருணம் என்று கூறினார். “ரிஷப்புடன் இந்த சந்திப்பு மிகவும் உணர்ச்சிகரமான தருணம்; நாங்கள் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட்டில் ஒன்றாக விளையாடியிருக்கிறோம். போட்டிகள் நடந்து முடிந்த பிறகு, நாங்கள் ஒன்றாக நிறைய பேசி இருக்கிறோம், ஒன்றாக வெளியே சென்றிருக்கிறோம், ”என்று அவேஷ் நினைவுகளை பகிறந்தார். மேலும் டெல்லியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங்கின் வழிகாட்டுதலை "மிஸ்" செய்வதாக அவேஷ் கூறினார். "டெல்லி கேபிடல்ஸுடன் எனக்கு உணர்வுப்பூர்வமான தொடர்பு இருந்ததால் 'ரிக்கி பாண்டிங் அண்ட் கோ'வை அதிகமாக மிஸ் செய்வேன்." என்று கூறியிருந்தார். ஐபிஎல் 2021ல் 7.37 என்ற நல்ல எக்கனாமி விகிதத்தில் 16 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை அவேஷ் எடுத்தது குறிப்பிடத்தக்கது.