கே.ஜி.எஃப். படத்தின் மிகப்பெரும்  ப்ளாக் பஸ்டர் வெற்றிக்குப் பிறகு பிரசாந்த் நீல் அடுத்ததாக இயக்கி வரும் திரைப்படம் சலார். 


சலார்: 


பாகுபலி படம் மூலம் ஏற்கெனவே பான் இந்தியா ஸ்டாராக பிரபாஸ் உருவெடுத்துள்ள நிலையில், தொடர்ந்து அவர் பான் இந்தியா படங்களிலேயே கவனம் செலுத்தி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் கன்னட சினிமா இயக்குநரான பிரசாந்த் நீல், பான் இந்தியா திரைப்படமான சலார் படம் மூலம் தெலுங்கில் காலடி எடுத்துவைத்து நடிகர் பிரபாஸூடன் கைக்கோர்த்துள்ளார்.


ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரமாண்டமான பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார்.


விறுவிறுப்பான படப்பிடிப்பு:


கேஜிஎஃப் படத்துக்கு இசையமைத்து புகழ்பெற்ற ரவி பர்சூர் இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். மேலும் மலையாள நடிகர் ப்ரித்விராஜ் சுகுமாறன், நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகர் ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரியா ரெட்டி உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


2021ஆம் ஆண்டு முதல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக முன்னதாக இந்தப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. அதன் பின்னர் நடிகர் பிரபாஸ் ராதே ஷ்யாம் திரைப்படத்திலும், பிரசாந்த் நீல் கேஜிஎஃப் 2 படத்திலும் பிசியாகிவிட, சென்ற ஆண்டு ஜூன் மாதம் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.


ஆர்.சி.பி.க்கு ஆதரவு:


கேஜிஎஃப் படத்தின் ஒரு கதாபாத்திரத்தை மையப்படுத்தி சலார் படத்தின் கதை அமைந்திருருக்கலாம் என ஏற்கெனெவே தகவல்கள் வெளியாகிவருகின்றன். இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 28ஆம் தேதி சலார் படம் உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், தற்போது ஐபில் சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை டேக் செய்து சலார் படக்குழு பகிர்ந்துள்ள ட்வீட் இணையத்தில் வைரலாகியுள்ளது.


"ரெபல் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் பிரபாஸின் சலார் படம் முழு பேக்கேஜாக இந்த ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி வெளியாகவுள்ளது.  ஹலோ ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்த ஆண்டு ரெபல் மோடை கட்டவிழ்த்துவிட்டு கலக்குவோம்” என சலார் படக்குழுவின் அதிகாரப்பூர்வ கணக்கில் இருந்து ட்வீட் செய்யப்பட்டுள்ளது.


 






இந்த ட்வீட் இணையத்தில் லைக்ஸ்களை அள்ளி ட்விட்டரில் வைரலாகி வருகிறது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நாளை (ஏப்.06) ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.