கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்தியன் ப்ரீமியர் லீக். இதுவரை 16 சீசன்கள் முடிந்த நிலையில்  இந்த ஆண்டு 17 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த மே 8 ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 165 ரன்கள் எடுத்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி வெறும் 9.4 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.


கே.எல்.ராகுலை திட்டிய லக்னோ உரிமையாளர்:


இந்த போட்டி முடிந்த உடன் மைதானத்தில் இருந்து வெளியேறிய லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலை அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கோபத்துடன் திட்டினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. அதோடு சஞ்சீவ் கோயங்கா அப்படி நடந்து கொண்டது ரசிகர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.


விளையாட்டில் வெற்றி தோல்வி என்பதுதெல்லாம் நடக்கத்தான் செய்யும் அதற்காக இந்திய அணியின் முக்கியமான வீரராக இருக்க கூடிய கே.எல்.ராகுலை இப்படியா அவமதிப்பதுபோல் பேசுவது என்று லக்னோ உரிமையாளரை ரசிகர்கள் வறுத்தெடுத்தனர். அதோடு கிரிக்கெட்  வீரர்களும் சஞ்சீவ் கோயங்காவின் இந்த அநாகரீக செயலை கண்டித்தனர். இது போன்ற சர்ச்சைகளில் சஞ்சீவ் கோயங்கா சிக்குவது இது முதல் முறை அல்ல. 


ரசிகர்கள் கோபம்:


கடந்த 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த சூழலில் தான் முதன் முறையாக ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமானது ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. அதன் உரிமையாளராக இருந்தவர் தான் இந்த சஞ்சீவ் கோயங்கா. 2016 ஆம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் (ஆர்.பி.எஸ்) அணியின் கேப்டனாக செயல்பட்டவர் எம்.எஸ்.தோனி.


அந்த சீசனில் தோனி தலைமையிலான புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 7 வது இடத்தை பிடித்தது. தோனியின் கேப்டன்ஷியில் கடும் அதிருப்தி அடைந்த அணி நிர்வாகம் 2017 ஆம் நடைபெற்ற ஐ.பி.எல் சீசனில் தோனியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது. அவருக்கு பதிலாக அந்த அணியின் புதிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மீத் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு வரை சி.எஸ்.கே அணிக்காக 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் கோப்பையை வென்று கொடுத்த  தோனியை ஆர்.பி.எஸ் அணி அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளது என்று ஆர்.பி.எஸ் அணி நிர்வாகத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.  


தோனியை அவமானப்படுத்திய புனே சூப்பர் ஜெயண்ட்ஸ்:




அந்த அணியின் இந்த செயல்பாட்டையும் தாண்டி ரசிகர்களை மேலும் கோபமாக்கியது சஞ்சீவ் கோயங்காவின் சகோதரர் ஹர்ஷ் கோயங்கா வெளியிட்ட ட்வீட் ஒன்று. அதாவது 2017 ஏப்ரல் 6 ஆம் தேதி அவரது ட்விட்டர் (தற்போது எக்ஸ்) பக்கத்தில், “காட்டின் ராஜா யார் என்பதை நிரூபிக்கிறார் ஸ்மித். தோனியை அவர் முழுவதுமாக மறைத்து விட்டார். இது கேப்டன் இன்னிங்ஸ். கேப்டனாக ஸ்மித்தை நியமித்தற்கான சிறந்த நடவடிக்கை இது” என்று கூறியிருந்தார்.


சீண்டிய கோயங்கா சகோதரர்.. சீறிய சாக்‌ஷி தோனி:


சில நாட்களுக்கு பின்னர் தோனியின் மனைவி சாக்‌ஷி தோனி , ஹர்ஷ் கோயங்காவிற்கு பதிலடி கொடுத்தார். இந்து மாத புராணத்தை மேற்கோள்காட்டி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ”பறவை உயிருடன் இருக்கும் போது எறும்புகளை திண்ணும். அதே பறவை இறந்து விட்டால் எறும்புகள் அந்த பறவையை சாப்பிடும். காலம் சூழலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மாறலாம். வாழ்க்கையில் யாரையும் அவமானப்படுத்தவோ, புண்படுத்தவோ வேண்டாம். இன்று நீங்கள் சக்தி வாய்ந்தவராக இருக்கலாம். ஆனால் நினைவில் கொள்ளுங்கள்.




நேரம் உங்களை விட சக்திவாய்ந்தது. ஒரு மரத்தில் இருந்து மில்லியன் கணக்கான தீப்பெட்டிகளை உருவாக்கலாம். ஆனால் அதை எரிக்க ஒரு தீக்குச்சி மட்டுமே போதுமானது.  எனவே நல்லதை செய்யுங்கள், நல்லவராக இருங்கள்” என்று சி.எஸ்.கேவின் ஹெல்மெட்டை அணிந்த படி புகைப்படத்தை வெளியிட்டு இந்த பதிவை பதிவிட்டிருந்தார். இது அந்த அணியின் உரிமையாளர்களுக்கு கொடுக்கப்பட்ட செருப்படி பதில் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இதற்கு அடுத்த ஆண்டு (2018) நடைபெற்ற போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியது.


கணவனுக்காக களம் இறங்குவாரா அதியா ஷெட்டி?


இந்நிலையில் தான் அன்று தோனியை புனே அணி நிர்வாகம் அவமானப்படுத்திய போது அதற்கு தோனியின் மனைவி தக்கபதிலடி கொடுத்தார். அதேபோல், தற்போது கே.எல்.ராகுலை அவர்கள் அவமானப்படுத்தியதற்கு கே.எல்.ராகுலின் மனைவி அதியா ஷெட்டியும் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கின்றனர் ரசிகர்கள். மிகப்பெரிய தொழிலதிபர்களாக இருந்தாலும் தங்கள் அணிக்காக விளையாடும் சக வீரர்களை மதிக்க வேண்டும் என்பதே விளையாட்டு ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.