ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதால் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த்-க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஒரு போட்டியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


டெல்லி அணிக்கு விழுந்த பேரிடி:


17ஆவது ஐபிஎல் தொடரின் 56வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல் அணியும் ராஜஸ்தான் ராயல் அணியும் மோதிக்கொண்டன. இந்தப் போட்டி டெல்லி அணியின் சொந்த மைதானமான அருண் ஜெட்லி மைதானத்தில் கடந்த 7ஆம் தேதி நடைபெற்றது.


டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் சேர்த்தது. அடுத்து 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களம் இறங்கி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.


இந்த போட்டியில் மெதுவாக பந்து வீசியதால் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் ஒரு போட்டியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதுமட்டும் இன்றி அவருக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


ஒட்டு மொத்த அணிக்கும் அபராதம்:


நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இருந்து 10 நிமிடங்கள் தாமதமாக டெல்லி அணி தனது கடைசி ஓவரை வீச தொடங்கியுள்ளது. நடப்பு சீசனில் டெல்லி அணிக்கு விதிக்கப்படும் மூன்றாவது அபராதம் இதுவாகும். இம்பாக்ட் பிளேயர் உள்பட டெல்லி அணியின் மற்ற வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


இவர்களுக்கு போட்டியின் ஒரு நாள் ஊதியத்தில் இருந்து 50 சதவிகிதம் அல்லது 12 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேட்ச் ரெஃப்ரியின் முடிவுக்கு எதிராக டெல்லி அணி நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.


மெய்நிகர் வழியாக விசாரணை நடத்திய சம்பந்தப்பட்ட பிசிசிஐ அதிகாரி, போட்டி நடுவரின் முடிவே இறுதியானது, அதற்கு அனைத்து அணிகளும் கட்டுப்பட வேண்டும் என தெரிவித்துவிட்டார். அடுத்ததாக, வரும் 12ஆம் தேதி பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி விளையாட உள்ளது.


இது முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால், இந்த போட்டியில் டெல்லி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட காரணத்தால் இந்த போட்டியில் பந்த்-ஆல் விளையாட முடியாது. எனவே, இது டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


டெல்லி அணியை போலவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் இந்த போட்டியில் பெங்களூரு அணியும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், சென்னை, ஹைதராபாத் அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முனைப்பு காட்டி வருகின்றன.