ஐபிஎல் தொடரில் அறிமுகமான தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் குறித்து சச்சின் பேசிய வீடியோ, இணையத்தில் வைரலாகியுள்ளது.


ஐபிஎல் தொடரில் அறிமுகமான அர்ஜுன் டெண்டுல்கர்:


கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர்,  கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். கடந்த 2021ம் ஆண்டு முதல் அவர் மும்பை அணியில் இடம்பெற்று இருந்தாலும், நேற்று தான் முதன்முறையாக அந்த அணிக்காக களமிறங்கினார்.  அர்ஜுன் டெண்டுல்கருக்கான அறிமுக தொப்பியை போட்டிக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோகித் சர்மா வழங்கினார். இந்த போட்டியில், 2 ஓவர்களை வீசிய அர்ஜுன் விக்கெட் ஏதும் விட்டுக்கொடுக்காமல் 18 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தார்.


ஐபிஎல் வெளியிட்ட வீடியோ:


கொல்கத்தா மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில், சச்சினும் அவரது மகன் சச்சினும் சேர்ந்து தங்களது கருத்துகளை வெளிப்படுத்திய வீடியோ, இந்தியன் பிரிமீயர் லீக் தொடரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அர்ஜுன் டெண்டுல்கர் பயிற்சியில் ஈடுபடுவது, அவரை சச்சின் டெண்டுல்கர் கண்காணிப்பது மற்றும் முதல் போட்டியில் பந்துவீசியது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.






அர்ஜுன் மகிழ்ச்சி:


வீடியோவில் பேசியுள்ள அர்ஜுன் டெண்டுல்கர் “இது ஒரு பெரிய தருணம். கடந்த 2008ம் ஆண்டு முதல் நான் ஆதரவு அளித்து வரும் அணிக்காகவே விளையாடுவது என்பது சிறப்பானது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் இந்திய அணி கேப்டனான ரோகித் சர்மாவிடம் இருந்து அறிமுக தொப்பியை வழங்குவது மகிழ்ச்சியானது. ” என குறிப்பிட்டுள்ளார்.


சச்சின் உருக்கம்:


மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமானது குறித்து பேசியுள்ள சச்சின் டெண்டுல்கர் “இது எனக்கு மிகவும் புதிய அனுபவம் ஏனென்றால் இதுவரை அர்ஜுன் விளையாடுவதை காண நான் சென்றதே இல்லை. அவர் சுதந்திரமாக வெளியே சென்று தன்னை வெளிப்படுத்தி என்ன தோன்றுகிறதோ அதை செய்ய வேண்டும் என விரும்பினேன். இன்று கூட நான் மைதானத்திற்கு வராமல் உள்ளே இருந்த அறையில் தான் அமர்ந்து இருந்தேன். ஏனென்றால் அர்ஜுனை அவனது திட்டங்கள் மீது இருந்த திசை திருப்ப விரும்பவில்லை. மைதானங்களில் இருந்த பெரிய திரைகளில் தான் போட்டியை பார்த்தேன். இது வித்தியாசமாக இருக்கிறது 2008ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் எனக்கான முதல் சீசன். 16 ஆண்டுகள் கழித்து அதே அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடுவது மோசமான விஷயம் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.


அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகமான கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.