ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.


அதிரடி தொடக்கம்:


ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 215 ரன்கள் என்ற, இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அன்மோல்ப்ரீத் சிங் மற்றும் அபிஷேக் சர்மா அதிரடியாக ரன் குவித்தனர். குறிப்பாக அடுத்தடுத்த பவுண்டரிகலை விளாசிய அன்மோல்ப்ரீத் சிங், 35 ரன்கள் சேர்த்து இருந்தபோது சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா - அன்மோல்ப்ரீத் சிங் கூட்டணி முதல் விக்கெட்டிற்கு 51 ரன்களை சேர்த்தது. 


அபிஷேக் சர்மா:


அதேநேரம் மறுமுனையில் சக தொடக்க வீரரான அபிஷேக் சர்மா தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 34 பந்துகளில் 55 ரன்களை விளாசி, ரவிச்சந்திரன் அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  


அடுத்தடுத்து சரிந்த விக்கெட்:


மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த திர்பாதி மற்றும் கிளாசென் கூட்டணி அதிரடியாக விளையாடி ரன்சேர்த்தது. குறிப்பாக கிளாசென் அடுத்தடுத்து பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசினார். 26 ரன்களை சேர்த்து இருந்தபோது சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் திரிபாதி தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் 47 ரன்களை சேர்த்து இருந்தபோது சாஹல் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். அவரை தொடர்ந்து கேப்டன் மார்க்ரமும் 6 ரன்களுக்கு நடையை கட்டினார். இறுதியில் 19வது ஓவரில்  அதிரடியாக விளையாடிய பிலிப்ஸ் ஹாட்ரிக் சிக்ஸ் மற்றும் பவுண்டரி அடித்து அசத்தினார். ஆனால், அவர் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.


ஐதராபாத் த்ரில் வெற்றி


கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டபோது, சந்தீப் சர்மா பந்துவீச்சில் சமத் கேட்ச் அவுட்டானார். அது நோபால் ஆனதால் மீண்டும் வீசப்பட்ட கடைசி பந்தில், ஐதராபாத் வெற்றி பெற 4 ரன்கள் தேவைப்பட்டது. இதையடுத்து வீசப்பட்ட ப்ரீ-ஹிட் பந்தில் சமாத் பவுண்டரி அடித்து ஐதராபாத்திற்கு திரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.


முதல் இன்னிங்ஸ் விவரம்:


டாஸ் வென்ற ராஜஸ்தான்:


போட்டியில்  டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு  செய்தது.  நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில், 72 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. அதற்கு பழிவாங்கும் நோக்கில் ஐதராபாத் அணி களமிறங்கியது. அதேநேரம், கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள ராஜஸ்தான், இன்றைய போட்டியின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்ப முனைப்பு காட்டி வருகிறது.


ஜெய்ஷ்வால் அதிரடி:


ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஷ்வால் மற்றும் பட்லர் கூட்டணி அதிரடியாக ரன் குவித்தது. குறிப்பாக ஜெய்ஷ்வால் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஆனால், 18 பந்துகளில் 35 ரன்களை சேர்த்து ஜான்சென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 


மிரட்டிய பட்லர் - சாம்சன் கூட்டணி:


இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த பட்லர் மற்றும் சாம்சன் கூட்டணி அதிரடியாக ரன் குவித்தது.  தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பட்லர் 32 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதனிடையே, இந்த கூட்டணி வெறும் 61 பந்துகளில் 100 ரன்களை சேர்த்து ராஜஸ்தான் அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றது. இந்த கூட்டணியை பிரிக்க ஐதாராபாத் எடுத்த பல முயற்சிகளும் தோல்வியுற்றன.


அரைசதமும், தவறவிட்ட சதமும்:


அதிரடியாக விளையாடிய சாம்சன் 33 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.  தொடர்ந்து ஐதராபாத்தின் பந்துவீச்சை பட்லர் நாலாபுறமும் சிதறடிக்க, சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 95 ரன்களில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 


ஐதராபாத்திற்கு இலக்கு:


இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 214 ரன்களை குவித்தது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி த்ரில் வெற்றி பெற்றது.