ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி, 56 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
லக்னோ அதிரடி:
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், குஜராத் அணி நிர்ணயித்த 228 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணிக்கு நல்ல துவக்கம் அமைந்தது. தொடக்க வீரர்களான கைல் மேயர்ஸ் மற்றும் டி காக் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். அடுத்தடுத்து பவுண்டரி மற்ரும் சிக்சர்களை விளாசினர். இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணிக்கு இது நல்ல தொடக்கமாக இருந்தது. இருப்பினும் 48 ரன்கள் சேர்த்து இருந்தபோது மோகித் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும். மேயர்ஸ் - டி காக் கூட்டணி முதல் விக்கெட்டிற்கு 88 ரன்களை சேர்த்தது.
டி-காக் அதிரடி:
மறுமுனையில் டி-காக் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், முதல் 10 ஓவர்களிலேயே லக்னோ அணி 100 ரன்களை கடந்தது. நடப்பு தொடரில் முதன்முறையாக களமிறங்கிய டி-காக், 31 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதனிடையே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபக் ஹூடா 11 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
சறுக்கிய லக்னோ:
அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்ததை தொடர்ந்து லக்னோ அணியின் ரன்வேகம் கணிசமாக குறைந்தது. பவுண்டரி மற்றும் சிக்சர்களை விட்டுக்கொடுக்காமல் குஜராத் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தி லக்னோவிற்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் ரன் சேர்க்க முடியாமல் திணறிய ஸ்டோய்னிஷ் வெறும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த டி-காக் 70 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அவரை தொடர்ந்து பூரானும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். பதோனி 21 ரன்களிலும், க்ருணால் பாண்ட்யா ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
குஜராத் வெற்றி:
இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. குஜராத் சார்பில் அதிகபட்சமாக மோகித் சர்மா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் நடப்பு தொடரில் மட்டும் லக்னோ அணியை குஜராத் இரண்டு முறை வீழ்த்தியுள்ளது.
முதல் இன்னிங்ஸ் விவரம்:
குஜராத் அதிரடி பேட்டிங்
போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் விரிதிமான் சாஹா ஆகியோர் அதிரடியாக விளையாடி அதிவேகமாக ரன் குவித்தனர். அடுத்தடுத்து சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக விளாசிய இந்த கூட்டணியை முறியடிக்க முடியாமல் லக்னோ அணி விழிபிதுங்கியது. விரிதிமான் சாஹா வெறும் 20 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்ய, மறுமுனையில் சற்றே நிதானமாக விளையாடிய சுப்மன் கில் 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து 81 ரன்கள் சேர்த்து இருந்தபோது சாஹா ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டிற்கு கில் - சாஹா கூட்ட்ணி 142 ரன்களை குவித்து அசத்தியது.
சுப்மன் கில் அதிரடி:
இதையடுத்து, கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுடன் சேர்ந்து சுப்மன் கில் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். சிறிதுநேரம் அதிரடி காட்டிய கேப்டன் பாண்ட்யா, 15 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த மில்லர், தனது பங்கிற்கு விரைவாக ரன் சேர்த்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 94 ரன்களை சேர்த்தார்.
குஜராத் அணிக்கு இலக்கு:
இதனால் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை சேர்த்தது. இந்த இலக்கை எட்ட முடியாமல் லக்னோ அணி தோல்வியுற்றது.