ஐபிஎல் தொடரில் இன்று (மே, 13) நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக் கொண்டன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் வார்னர் தனது அணி முதலில் பந்து வீசும் என அறிவித்தார்.
அதன்படி பேட்டிங்கைத் தொடங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 7 அணி விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணியின் சார்பில் ப்ரப்சிம்ரன் 103 ரன்கள் குவித்திருந்தார். டெல்லி அணியின் சார்பில் இஷாந்த் சர்மா மட்டும் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.
168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி முதல் ஓவரில் இருந்தே அடித்து ஆடியது. டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் சால்ட் சிறப்பான தொடக்கத்தினை கொடுத்தனர். இவர்களின் அதிரடியால் டெல்லி அணி ப்வர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் சேர்த்தது.
சுழலில் சுருண்ட டெல்லி
மிகவும் வழுவான நிலையில் இருந்த டெல்லி அணி வெற்றி இலக்கை எளிதில் எட்டி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சினால் டெல்லி அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிந்தது. அதாவது பவர்ப்ளே முடிந்து 7வது ஓவரை வீசிய ஹர்ப்ரீத் பாரர் அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் சால்ட்டின் விக்கெட்டை கைப்பற்றினார். அதன் பின்னர் 8வது ஓவரை வீசிய ராகுல் சஹார் மிட்ஷெல் மார்ஷின் விக்கெட்டை கைப்பற்றினார். மீண்டும் 9வது ஓவரை வீசவந்த ஹர்ப்ரீத் அந்த ஓவரின் முதல் பந்தில் ரோஷோவையும் கடைசிப் பந்தில் வார்னரையும் அவுட் ஆக்கினார். அதன் பின்னர் 10வது ஓவரை வீசிய ராகுல் சஹார் அக்ஷர் பட்டேலின் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். 11வது ஓவரை வீசிய ஹர்ப்ரீத், டெல்லி அணியின் இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய மனீஷ் பாண்டே ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 68 ரன்களில் இருந்த போது விக்கெட் எதையும் இழக்காமல் இருந்த டெல்லி அணி அடுத்து 20 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.
6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய டெல்லி அணி 14வது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது. அதன் பின்னர் டெல்லி அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடிய அமன் கானும் தனது விக்கெட்டை எல்லீஸ் பந்து வீச்சில் இழக்க டெல்லி அணியின் நம்பிக்கையும் காலியானது. அதன் பின்னர் துபேவும் எல்லீஸ் பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆனார். வெற்றி பெற முடியாது என உணர்ந்து கொண்ட டெல்லி அணியினர் தோல்வி வித்தியாசத்தை குறைக்க போராடினர். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெடுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு முன்னேறியது. மேலும் டெல்லி அணி இந்த தோல்வி மூலம் ப்ளேஆஃப் வாய்ப்பை முற்றிலும் இழந்தது. பஞ்சாப் அணி சார்பில் ஹர்ப்ரீத் 4 விக்கெட்டுகளும், ராகுல் சஹார் மற்றும் எல்லீஸ் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.