RR Vs PBKS, IPL 2024: ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் மோத உள்ள போட்டி, இரவு 7.30 மணிக்கு கவுகாத்தியில் உள்ள பரஸ்பரா மைதானத்தில் நடைபெற உள்ளது.


ஐபிஎல் தொடர் 2024:


இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 64 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், மும்பை, குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளன. நேற்றைய போட்டியின் முடிவை தொடர்ந்து, ராஜ்ஸ்தான் இரண்டாவது அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில், இன்றைய லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.


ராஜஸ்தான் - பஞ்சாப் மோதல்:


கவுகாத்தியில் உள்ள பரஸ்பரா மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. ராஜஸ்தான் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி, 8 வெற்றிகளுடன் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இருப்பினும் கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் அந்த அணி தோல்வியுற்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வென்று வெற்றிப்பாதைக்கு திரும்புவதுடன், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் நீடிப்பதை உறுதி செய்யவும் முனைப்பு காட்டி வருகிறது. மறுமுனையில் பஞ்சாப் அணி ஏற்கனவே பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில் ஆறுதல் வெற்றி பெறவும், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதை தவிர்க்கும் நோக்கிலும் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஓடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


பலம், பலவீனங்கள்:


உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது பஞ்சாப் அணிக்கு முதல் பலமாக பார்க்கப்படுகிறது. கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் மோசமான பேட்டிங் காரணமாகவே அந்த அணி தோல்வியுற்றது. பேர்ஸ்டோ, சஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் சர்மா ஆகியோர் மட்டுமே அந்த அணிக்காக ரன் சேர்க்கின்றனர். மற்ற வீரர்களும் திறம்பட செயல்பட்டால் மட்டுமே, இன்றைய போட்டியில் வெற்றி பெற முடியும். ராஜஸ்தான் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும் தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியுற்று இருப்பது, வீரர்களை மனதளவில் சோர்வடைய செய்துள்ளது. ஜோஸ் பட்லர் அணியிலிருந்து விலகி இருப்பது பின்னடைவாக கருதப்படுகிறது. பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னதாகவே சில வெற்றிகளை ஈட்டி, வலுவான கம்பேக் கொடுக்க சஞ்சு சாம்சன், ஜெய்ஷ்வால் மற்றும் ரியான் பராக் ஆகியோர் கூடுதலாக உழைக்க வேண்டியுள்ளது. பந்துவீச்சில் போல்ட், அவேஷ் கான், அஷ்வின் மற்றும் சாஹல் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.


நேருக்கு நேர்:


ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் அணி 16 முறையும், பஞ்சாப் அணி 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பஞ்சாப் அணி அதிகபட்சமாக 223 ரன்களையும், குறைந்தபட்சமாக 124 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் ராஜஸ்தான் அணி அதிகபட்சமாக 226 ரன்களையும், குறைந்தபட்சமாக 112 ரன்களையும் பதிவு செய்துள்ளது. 


கவுகாத்தி மைதானம் எப்படி?


கவுகாத்தி மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். எனவே, அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது, வெற்றிக்கு உதவும் என கருதப்படுகிறது.


உத்தேச அணி விவரங்கள்:


ராஜஸ்தான்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், டாம் கோஹ்லர்-காட்மோர், சஞ்சு சாம்சன், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷுபம் துபே, ரோவ்மன் பவல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்


பஞ்சாப்: ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், ரிலீ ரோசோவ்,சஷாங்க் சிங், ஜிதேஷ் சர்மா, சாம் கரன், அசுதோஷ் சர்மா, கிறிஸ் வோக்ஸ், ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்