IPL Playoffs 2024: ஃபெரோஸ் ஷா கோட்லா ஸ்டேடியத்தில் நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டெல்லி அணி, லக்னோ அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 


பிளே ஆஃப்க்கு தகுதிபெற்ற ராஜஸ்தான்:


இதையடுத்து, இந்த தோல்வியின் எதிரொலியால் ஐபிஎல் 2024 பிளே ஆஃப்களுக்கு தகுதி பெற்ற இரண்டாவது அணி என்ற பெருமையை பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 


சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் முறையே ஒன்று மற்றும் இரண்டு போட்டிகள் உள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் இரண்டும் மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றாலும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எந்தவிதத்திலும் பாதிக்காது. ஏனெனில் 16 புள்ளிகளுடன் வலுவான நிலையில் உள்ளது. 






டெல்லி அணிக்கு வாய்ப்புள்ளதா..? 


டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ஐபிஎல் 2024ல் தனது அனைத்து லீக் போட்டிகளையும் விளையாடி முடித்துவிட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் கடைசி லீக் போட்டிகளில் எந்த அணி வெற்றிபெறுகிறதோ, அந்த அணி பிளே ஆஃப் சுற்றை உறுதிசெய்யும். அதேநேரத்தில், டெல்லி கேப்பிடல்ஸை பொறுத்தவரை, பிளே ஆஃப் சுற்றுக்கான முதல் 4 இடங்களுக்கு நுழைய வேண்டும் என்றால், மற்ற அணிகள் தோல்வியடைய வேண்டும் என்று அவர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். இருப்பினும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நிகர ரன் ரேட் -0.377 ஆக உள்ள நிலையில், பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவே என்று கூறப்படுகிறது. 


நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கிட்டத்தட்ட பிளே ஆஃப் பந்தயத்தில் இருந்து வெளியேறியது. லக்னோ அணி வருகின்ற மே 17ம் தேதி மும்பை அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் லக்னோ அணி வெற்றிபெற்றாலும், 14 புள்ளிகளை மட்டுமே பெறும். பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல, 16 புள்ளிகள் தேவை என்பதே குறிப்பிடத்தக்கது. 


ஹைதராபாத் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் உள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் அந்த வெற்றிபெற்றாலோ, அல்லது ஒரு போட்டியில் வெற்றிபெற்றாப்லோ பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும். இரண்டிலும் ஒருவேளை தோல்வியுற்றால், சென்னை மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்புகள் உண்டு. 


அதிகாரப்பூர்வமாக வெளியேறிய 3 அணிகள்: 


ஐபிஎல் 2024ல் இதுவரை மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. இதற்கு பிறகு இந்த அணிகள் அனைத்திற்கும் ஒரு போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில், இந்த போட்டியில் இந்த மூன்று அணிகளும் வெற்றிபெற்றாலும் பிளே ஆஃப் என்பது சாத்தியமே கிடையாது. 


நேற்றைய போட்டி முடிவு: 


முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. 209 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.