ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றது.
நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக கிரிக்கெட் திருவிழாவை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு யார் யார் செல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கிட்டதட்ட 4 அணிகள் 10 புள்ளிகளுடன் 4 இடத்துக்கு போட்டியிட்டுள்ளது. இதேபோல் 2 அணிகள் 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் உள்ளது.
இப்படியான நிலையில் இன்று நடக்கும் 48வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றது. ராஜஸ்தானில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஜியோ சினிமா செயலிலும் நேரலையாக காணலாம்.
நடப்பு சீசனின் நிலை
குஜராத் அணி 10 போட்டிகளில் ஆடி 6 வெற்றி, 4 தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதேபோல் ராஜஸ்தான் அணி 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்விகளை பெற்று 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
இதுவரை நேருக்கு நேர்
ராஜஸ்தான் - குஜராத் அணிகள் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 3 போட்டிகள் கடந்தாண்டு நடைபெற்றது. இதில் 3 போட்டிகளிலும் குஜராத் அணியே வெற்றி பெற்றது. குறிப்பாக இறுதிப் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் முதல்முறையாக சாம்பியன் ஆனது. ஆனால் நடப்பு சீசனில் முன்னதாக இரு அணிகளுக்கும் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது. இதனால் கடந்த சீசனின் தோல்விக்கு ராஜஸ்தான் அணியும், நடப்பு சீசன் தோல்விக்கு குஜராத் அணியும் பதிலடி கொடுக்கும் என்பதால் இந்த போட்டி விறுவிறுப்பாக அமையும்.
அதிகப்பட்ச ரன்கள்
ராஜஸ்தான் அணி - 188 ரன்கள்
குஜராத் அணி - 192 ரன்கள்
குறைந்த பட்ச ரன்கள்
ராஜஸ்தான் அணி - 130 ரன்கள்
குஜராத் அணி - 177 ரன்கள்
போட்டி நடக்கும் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் அணி 49 போட்டிகளில் விளையாடி 33 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த இரு அணிகளும் முதல்முறையாக இந்த மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. குறிப்பாக குஜராத் அணி இந்த மைதானத்தில் விளையாடியதே இல்லை என்பதால் ராஜஸ்தான் அணியே இப்போட்டியில் வெற்றி பெறும் கணிக்கப்பட்டுள்ளது. இரு அணியும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறந்து விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Watch: கோலி.. கோலி.. கோஷமிட்டு வம்பிழுத்த ரசிகர்கள்.. ரசிகர்களை முறைத்த கம்பீர்.. வைரலாகும் வீடியோ!