கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணிக்கு 172 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் படி களமிறங்கிய ஹைதராபாத் அணி தொடக்கத்தில் கொல்கத்தா அணியைப் போல் விக்கெட்டுகளை இழந்தாலும், ரன் குவிப்பில் கவனமாக இருந்தது. அதனால் அந்த அணி பவர்ப்ளே முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் 7வது ஓவரில் ஹைதராபாத் அணி மேலும் ஒரு விக்கெட்டை இழந்து தடுமாறியது.
அதன் பின்னர் கைகோர்த்த கேப்டன் மார்க்ரம் மற்றும் க்ளாஸன் ஜோடி நிதானமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இவரும் மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டதுடன், 10வது ஓவருக்குப் பின்னர் அடித்து ஆட ஆரம்பித்தனர். இதனால் அணியின் ஸ்கோர் சீராக வெற்றி இலக்கை நோக்கி முன்னேறியது. இருவரும் 47 பந்தில் 70 ரன்கள் சேர்த்த நிலையில் க்ளாஸன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஆனால் பொறுப்புடன் ஆடி வந்த ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் சிறப்பாக விளையாடினார். கடைசி 4 ஓவர்களில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவை எனும் நிலை இருந்தது. களத்தில் இருந்த சமத் மற்றும் மார்க்ரம் உறுதியான ஆட்டத்தினால் கொல்கத்தா அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினர். ஆனால் 17வது ஓவரின் 5வது பந்தில் மார்க்ரம் தனது விக்கெட்டை இழக்க போட்டி கொல்கத்தா வசம் செல்லத் தொடங்கியது.
போட்டி பரபரப்பாக சென்று கொண்டு இருக்கும் போது கொல்கத்தா அணி ஃபீல்டிங்கில் சொதப்பினர். ஆனால் 18வது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி 2 ஓவர்களில் 21 ரன்கள் தேவையாக இருந்தது. 19வது ஓவரின் முதல் பந்தில் யான்சன் தனது விக்கெட்டை இழக்க போட்டியில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அடுத்து வந்த புவனேஷ்வர் குமார் தான் எதிர் கொண்ட முதல் பந்தை பவுண்டரியாக மாற்றினார். அந்த ஓவரில் புவனேஷ்வர்குமார் மற்றும் சமத் இருவரும் இணைந்து 12 ரன்கள் சேர்க்க, கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. 20வது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி அந்த ஓவரின் முதல் இரண்டு பந்து பந்துகளில் இரண்டு ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்றாவது பந்தில் சமத்தின் விக்கெட்டை கைப்பற்றினார். போட்டியின் கடைசி பந்தில் வெற்றிக்கு ஆறு ரன்கள் தேவை என இருந்தது. ஆனால் அந்த பந்தை எதிர்கொண்ட புவனேஷ்வர்குமார் அந்த பந்தை தவற விட கொல்கத்தா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.