புதன்கிழமை மொஹாலியில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தின் இறுதி ஓவரில் 215 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது அதிகபட்ச ரன் சேஸிங்கை சமன் செய்துள்ளது. இரண்டாவது இடத்திலும் மும்பை உள்ளது குறிப்பிடத்தக்கது.


பஞ்சாப் -மும்பை மோதல்


நேற்று இரவு ஆட்டமாக நடைபெற்ற மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணியின் லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஜிதேஷ் ஷர்மா காட்டிய அதிரடியில் சிக்ஸர்கள் பறந்தன. 200 ரன்களை எளிதாக கடந்த அணி 214 ரன்கள் குவித்தது. லியாம் லிவிங்ஸ்டோன் 42 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டத்தை விறுவிறுப்பான தொடக்கமாக அமைத்தார். ஜிதேஷ் சர்மா 27 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ஷிகர் தவான் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார், மேத்யூ ஷார்ட் 27 ரன்கள் சேர்த்தார்.



சூர்யகுமார் - இஷான் ஜோடி


இதுவே நல்ல ஸ்கோர், கண்டிப்பாக பஞ்சாப் அணி வெற்றி பெறும் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே. அதிலும் பவர்பிளே அவர்களுக்கு இந்த ரன்னை சேஸ் செய்யும் அளவிற்கு சிறப்பாக அமையவில்லை. அதிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தனர். மும்பை அணியின், இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் கைகோர்த்து நிற்க, பஞ்சாப் அணியின் முக்கியமான பந்து வீச்சாளர்கள் அனைவரும் பதிலின்றி தவித்தனர். மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்ட சூர்யகுமார் பேட்டை எடுத்து சுழற்ற சுழற்ற பந்து பவுண்டரியை தாண்டி விழுகிறது.


தொடர்புடைய செய்திகள்: MS Dhoni on Last IPL: 'இது என்னோட கடைசி சீசன்னு நான் சொல்லவேயில்ல’ ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தோனி..!


எளிதாக வென்ற மும்பை


இந்த இந்திய ஜோடி முறையே 75 மற்றும் 66 ஓட்டங்களைப் பெற்றிருக்க இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சேஸிங்கின்போது மிளிர்ந்தனர். இருவரும் ஒரு கட்டத்தில் ஆட்டமிழக்க டிம் டேவிட் (19*) மற்றும் திலக் வர்மா (26*) ஆகியோர் 11 பந்துகள் மீதமிருந்த நிலையில் எளிதாக ஆட்டத்தை முடித்தனர். அசுரதனமான பேட்டிங்கிற்காக இஷான் கிஷான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 3.5 ஓவர்களில் 66 ரன்களையும், சாம் குர்ரன் 3 ஓவர்களில் 41 ரன்களையும் விட்டுக்கொடுத்தார்.



அதிகபட்ச ரன் சேஸ் பட்டியல்


இந்த போட்டியில் அதிக ரன்னை சேஸ் செய்து வென்ற நிலையில் ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன் சேஸ் பட்டியலில் மும்பை அணி ராஜஸ்தானுடன் 3 வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளது. 2021 இல் சென்னைக்கு எதிராக 219 ரன்களை சேஸ் செய்தது இரண்டாவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் 2020-இல் பஞ்சாப் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி சேஸ் செய்தது உள்ளது. மேலும் அசால்ட்டாக 200 ரன்களை அணிகள் குவித்து வரும், இந்த ஐபிஎல்லின் அதிகபட்ச ரன் சேஸாக இது அமைந்துள்ளது.