RR VS DC, IPL 2024: ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ள போட்டி, இரவு 7.30 மணிக்கு ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற உள்ளது.


ஐபிஎல் தொடர் 2024:


இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 8 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று நடைபெற உள்ள போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்  மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.


ராஜஸ்தான் - டெல்லி மோதல்:


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. ராஜஸ்தான் அணி தனது போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இன்றைய போட்டியிலும் அந்த பயணத்தை தொடர ஆர்வம் காட்டுகிறது. மறுமுனையில் முதல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக தோல்வியுற்ற டெல்லி, இன்றைய போட்டி மூலம் வெற்றி கணக்கை தொடங்க தீவிரம் காட்டி வருகிறது. இதனால்,  இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


பலம், பலவீனங்கள்:


கடந்த தொடரில் முதல் 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்ற ராஜஸ்தான், கடைசியில் பெற்ற அடுத்தடுத்த தோல்விகளால் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது. தற்போதைய சூழலில் ராஜஸ்தான் அணி பட்லர், ஜெய்ஷ்வால், சாம்சன், பவல் மற்றும் ஜுரெல் என வலுவான பேட்டிங்கை கொண்டிருக்க, பந்துவீச்சில் சாஹல் மற்றும் அஷ்வின் நம்பிக்கை அளிக்கின்றனர். வேகப்பந்துவீச்சு சற்று பலவீனமாகவே தெரிகிறது. அதோடு ஒரு அணியாக சேர்ந்து செயல்பட்டால் இன்றைய போட்டியிலும் வெற்றியை ஈட்ட அதிக வாய்ப்புள்ளது. மறுமுனையில், கடந்த முறை வார்னர் தலைமையில் களமிறங்கிய டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதேநேரம், தற்போது காயத்தில் இருந்து மீண்ட கேப்டன் ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்கு திரும்பியது நம்பிக்கை அளிக்கிறது. முதல் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியது அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. இந்த முறை கூடுதல் கவனமாக செயல்பட வேண்டியது அவசியம்.


நேருக்கு நேர்:


ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 27 முறை நேருகு நேர் மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் அணி 14 முறையும், டெல்லி அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன.  டெல்லி அணிக்கு எதிராக ஒரு போட்டியில் ராஜஸ்தான் அணி அதிகபட்சமாக 222 ரன்களையும், குறைந்தபட்சமாக 115 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் டெல்லி அணி அதிகபட்சமாக 207 ரன்களையும், குறைந்தபட்சமாக 60 ரன்களையும் பதிவு செய்துள்ளது.


ஜெய்ப்பூர் மைதானம் எப்படி?


சவாய் மான்சிங் மைதானம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருந்துள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐந்து போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்றன. முதலில் பேட்டிங் செய்த அணிகள் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றன, சேசிங் அணிகள் இரண்டு முறை வெற்றி பெற்றன. இந்த தொடரின் முதல் போட்டியில் கூட, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி தான் வெற்றி பெற்றது. அதோடு, நடப்பு தொடரில் இதுவரை நடந்த 8 லீக் போட்டிகளிலும், உள்ளூர் அணிகள் தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


உத்தேச அணி விவரங்கள்:


ராஜஸ்தான்: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பராக்,  ஷிம்ரோன் ஹெட்மயர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், நந்த்ரே பர்கர், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல்


டெல்லி: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட், ரிக்கி புய், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, கலீல் அகமது