17வது ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதியில் இருந்து தொடங்கி நாளுக்கு நாள் திருவிழாவைப்போல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இதுவரை 8 லீக் போட்டிகள் முடிந்துள்ளது. அதன் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 


8வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இரு அணிகளும் இணைந்து பல சாதனைகளைப் படைத்துள்ளது. அது குறித்து இங்கு காணலாம். 



  • முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டினை இழந்து 277 ரன்கள் குவித்தது. 


  •  இதன் மூலம் பெங்களூரு அணியின் சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முறியடித்துள்ளது.


  • கடந்த 2013ஆம் ஆண்டு பெங்களூரு அணி புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் குவித்ததிருந்தது. இதுவே கடந்த 12 ஆண்டுகளாக சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 


  • இந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 18 பந்துகளில் அரைசதம் விளாசி இந்த சீசனின் அதிவேக அரைசதத்தினை பதிவு செய்தார். 


  • ஆனால் அந்த சாதனையை அவருடன் விளையாடிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா 16 பந்துகளில் அரைசதம் விளாசி அதிவேகத்தில் அரைசதம் விளாசியவர் என்ற சாதனை நடப்பு தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பதிவு செய்துள்ளார். 


  • 277 ரன்களை நோக்கி களமிறங்கிய மும்பை அணி 20 ஒவர்களில் 5 விக்கெட்டினை இழந்து 246 ரன்கள் சேர்த்தது. இதனால் போட்டியை ஹைதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 


  • இரு அணிகளும் இணைந்து இந்த போட்டியில் 523 ரன்கள் குவித்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை எதிர்கொண்ட போட்டி என்ற சாதனையை தன்வசப்படுத்தியுள்ளது. 


  • இரு அணிகளும் இணைந்து இந்த போட்டியில் 38 சிக்ஸர்களை விளாசியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் விளாசிய போட்டி என்ற சாதனையை இந்த போட்டி நிகழ்த்தியுள்ளது. 


  • இதற்கு முன்னர் கடந்த 2010ஆம் ஆண்டு சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரு அணிகளும் இணைந்து 469 ரன்கள் குவித்திருந்தது. அதுவே இதுவரை அதிக ரன்களை எதிர்கொண்ட ஐபிஎல் போட்டியாக இருந்தது. அந்த போட்டியில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்களும், ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களும் சேர்த்திருந்தது. 


  • அதேபோல் இந்த போட்டியில் இரு அணிகளும் இணைந்து 31 பவுண்டரிகளை விளாசியுள்ளது. இது கடந்த 2017ஆம் ஆண்டு குஜராத் லைன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அடிக்கப்பட்ட 31 பவுண்டரிகளை சமன் செய்துள்ளது. இதன் மூலம் அதிக பவுண்டரிகளை எதிர்கொண்ட போட்டி என்ற சாதனையை இந்த போட்டியும் படைத்துள்ளது. 


  • மும்பை இந்தியன்ஸ் அணி 246 ரன்கள் குவித்ததன் மூலம் ஐபில் வரலாற்றில் இரண்டாவது இன்னிங்ஸில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக பதிவு செய்துள்ளது.