Rohit Sharma: ரோகித் சர்மாவின் பேச்சு இணையத்தில் வைரலான நிலையில், அந்த வீடியோவை கொல்கத்தா அணி தனது டிவிட்டர் பக்கத்தில் இருந்து டெலிட் செய்துள்ளது.


ரோகித் சர்மா வீடியோ வைரல்:


ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. இதைமுன்னிட்டு இரு அணி வீரர்களும் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா, கொல்கத்தா அணியின் உதவி பயிற்சியாளரான அபிஷேக் நாயரை மைதானத்தில் சந்தித்து பேசினார். இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் தொடர்பான வீடியோவை, கொல்கத்தா அணி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அந்த உரையாடல் பல்வேறு சர்ச்சகளை ஏற்படுத்திய நிலையில், வீடியோவை கொல்கத்தா அணி தனது டிவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியது. ஆனால், அதற்குள் ரசிகர்கள் அந்த வீடியோவை பதிவிறக்கம் செய்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.






ரோகித் சர்மா மும்பை குறித்து சொன்னது என்ன?


அந்த வீடியோவில், “தற்போது ஒவ்வொன்றாக மாற்றம் கண்டு வருகிறது.இது எல்லாமே அவர்களிடம் தான் உள்ளது. என்ன ஆனாலும் இது என்னுடைய வீடு சகோதரா, இது நானே கட்டிய கோயில். எப்படியானாலும் இதுவே என்னுடைய கடைசி” என ரோகித் சர்மா பேசியுள்ளார். ஏற்கனவே ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு, குஜராத் அணியிலிருந்து அழைத்து வரப்பட்ட பாண்ட்யாவை மும்பை அணிக்கான கேப்டன் ஆக்கியதில் ரோகித் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், நடப்பு தொடருன் ரோகித் சர்மா மும்பை அணியில் இருந்து வெளியேறுவார் என பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இதுவே என்னுடய கடைசி என ரோகித் பேசியிருப்பது, அவர் மும்பை அணியிலிருந்து விலகுவதை உறுதிப்படுத்துவதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். அதோடு, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் அணியில் இருந்து விலக உள்ளதாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகியுள்ளன.


வெளியேறிய மும்பை அணி: 


ரசிகர்களின் கடும் அதிருப்திக்கு மத்தியில், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணி நடப்பு தொடரில் களமிறங்கியது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி வெறும் நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்று, தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது. இதனால், ஹர்திக் பாண்ட்யா மீதான, ரசிகர்களின் அதிருப்தி மேலும் அதிகரித்துள்ளது.