MI Vs KKR, IPL 2024: மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் மோத உள்ள போட்டி, இரவு 7.30 மணிக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.


ஐபிஎல் தொடர் 2024:


இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 59 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், மும்பை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளன. மீதமுள்ள 8 அணிகளும், பிளே-ஆஃப் சுற்றுக்காக முட்டி மோதி வருகின்றன. இனி வரும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்று, தங்களது பிளே-ஆஃப் வாய்ப்பை இறுதி செய்ய அந்த அணிகள் தீவிரம் காட்டுகின்றன. அந்த வகையில், இன்றைய லீக் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்  மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.


மும்பை - கொல்கத்தா பலப்பரீட்சை:


மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில்  உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. கொல்கத்தா அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி, 8 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மீதமுள்ள 3 லீக் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றாலே அந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். மும்பை அணியோ 12 போட்டிகளில் நான்கில் மட்டும் வென்று பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது. இருப்பினும் நடப்பு தொடரில் ஏற்கனவே பெற்ற தோல்விக்கு, கொல்கத்தாவை பழிவாங்க மும்பை அணி முனைப்பு காட்டுகிறது. இதனை தகர்த்து, நடப்பு தொடரில் முதல் அணியாக கொல்கத்தா பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.  போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


பலம், பலவீனங்கள்:


உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது கொல்கத்தா அணிக்கு முதல் பலமாக பார்க்கப்படுகிறது. நரைன், பிலிப் சால்ட், ரகுவன்ஷி மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் என அணியின் முன்கள பேட்ஸ்மேன்கள் அனைவருமே நல்ல ஃபார்மில் உள்ளனர். தொடர்ந்து ரன் குவித்தும் வருகின்றனர். பந்துவீச்சில் ஹர்ஷித் ரானா அதகளம் செய்து வருகிறார். ஸ்டார்க் மற்றும் நரைன் பக்கபலமாக செயல்பட்டு வருகின்றனர். மொத்தத்தில் அந்த அணி ஒரு குழுவாக செயல்பட்டு தொடர் வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. மும்பை அணியோ ஒரு குழுவாக சேர்ந்து செயல்பட முடியாமல் தான், நடப்பு தொடரில் பல போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. பேட்டிங்க் மற்றும் பந்துவீச்சு என எதிலுமே, நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாதன் விளைவாகவே, நடப்பு  தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது. இருப்பினும் கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் வெற்றி பெற்றது அந்த அணிக்கு உத்வேகத்தை அளிக்கிறது. 


நேருக்கு நேர்:


ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை அணி 23 முறையும், கொல்கத்தா அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு போட்டியில் மும்பை அணி அதிகபட்சமாக 210 ரன்களையும், குறைந்தபட்சமாக 108 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், மும்பை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 232 ரன்களையும், குறைந்தபட்சமாக 67 ரன்களையும் பதிவு செய்துள்ளது.


ஈடன் கார்டன் மைதானம் எப்படி?


ஈடன் கார்டன் மைதானம் பேட்டிங்கிற்கு ஏதுவானது என்பது அனைவரும் அறிந்ததே. நடப்பாண்டிலும் அதில் எந்த மாற்றமும் இல்லை. நடப்பு தொடரில் கொல்கத்தாவில் இதுவரை ஆறு போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் நான்கில் சேஸிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. பகல் நேரங்களில் வெயில் வாட்ட் வதைத்தாலும், இரவில் நிலவும் பனிப்பொழிவு பேட்டிங்கிற்கு சாதகமாக அமைகிறது. எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதே நல்ல முடிவாக இருக்கும்.


உத்தேச அணி விவரங்கள்:


கொல்கத்தா: பில் சால்ட், சுனில் நரைன், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி.


மும்பை: ரோகித் சர்மா, இஷான் கிஷன், நமன் திர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நேஹல் வதேரா, டிம் டேவிட், பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா, அன்ஷுல் கம்போஜ்