17வது சீசன் ஐபிஎல் தொடரின் 59வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச முடிவு செய்தது. குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது. குஜராத் அணியின் கேப்டன் கில் மற்றும் தொடக்க வீரர் சாய் சுதர்சன் என இருவரும் சதம் விளாசினர்.
அடுத்து களமிறங்கிய சென்னை அணி மூன்று ஓவர்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வந்தது. அடுத்து இணைந்த டேரில் மிட்ஷெல் மற்றும் மொயின் அலி அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியைச் சிறப்பாக செய்தது. டேரில் மிட்ஷெல் அதிரடியாக அரைசதம் விளாசி சிறப்பாக விளையாடிக் கொண்டு இருக்கும்போது தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
அடுத்து வந்த டூபே சிறப்பாக ரன்கள் குவிக்க திட்டமிட்டு விளையாடினார். மறு முனையில் இருந்த மொயின் அலி அரைசதம் விளாசிய பின்னர் தனது விக்கெட்டினை மோகித் சர்மா பந்தில் இழந்து வெளியேறினார். அடுத்து வந்த சென்னை அணியின் தளபதி ஜடேஜா அதிரடியாக சிக்ஸர்கள் விளாசினார்.
டூபே தனது விக்கெட்டினை 17வது ஓவரினை வீசிய மோகித் சர்மா பந்தில் இழந்து வெளியேறினார். இதையடுத்து களத்திற்கு தோனி வந்தார். சென்னை அணியின் தல - தளபதி எனப்படும் தோனி மற்றும் ஜடேஜா களத்தில் இருந்ததால் சென்னை ரசிகர்கள் ஆரவாரத்தில் துள்ளிக் குதித்தனர். ஆனால் 18வது ஓவரில் ஜடேஜா சிக்ஸர் விளாச முயற்சி செய்து தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
20வது ஓவர்வரை களத்தில் இருந்த தோனி மொத்தம் மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார். மொத்தம் 11 பந்துகளை சந்தித்த தோனி 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தார். 18வது ஓவரில்யே அணியின் தோல்வி உறுதியானதால், களத்தில் இருந்த தோனி ரசிகர்களை திருப்தி படுத்த 20வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளை அடுத்தடுத்து சிக்ஸருக்கு விளாசி அமர்க்களப்படுத்தினார். 42 வயதிலும் தனது அடிபட்ட காலுடன் அதிரடியாக சிக்ஸர்கள் விளாசும் தோனியைப் பார்த்து ரசிகர்கள் ஆரவாரத்தில் குதித்ததில் அகமதாபாத் மைதானமே அதிர்ந்தது.
இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.