Rohit Sharma: ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வரும் ரோகித் சர்மா, பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.


சொதப்பும் ரோகித் சர்மா:


நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த மும்பை அணிக்கு, நேற்றையை ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனாலும், ரோகித் சர்மாவை பொருத்தவரையில் மேலும் ஒரு மோசமான போட்டியாகவே அது தொடர்ந்தது. காரணம் கடந்த ஐந்து போட்டிகளில், நான்குமுறை ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்துள்ளார். குறைந்தபட்சமாக 20 ரன்களை கூட அவர் சேர்க்கவில்லை. அவரது மோசமான ஃபார்மே மும்பை அணியின் மோசமான நிலைக்கு முக்கிய காரணமாகவும் கருதப்படுகிறது. டி-20 உலகக் கோப்பை அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், ரோகித்தின் ஃபார்ம்-அவுட் இந்திய அணிக்கும் பின்னடைவாக கருதப்படுகிறது.


கண்கலங்கிய ரோகித் சர்மா..!


கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரை ரோகித் சர்மா சிறப்பாகவே தொடங்கினார். அதன்படி முதல் 7 போட்டிகளில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சதம் உட்பட, மொத்தம் 297 ரன்களை குவித்தார். ஆனால், அதற்கடுத்த 5 போட்டிகளில் முறையே  4, 11, 4, 8, 6 ரன்களில் ஆட்டமிழந்து, வெறும் 33 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் 6 ரன்களில் ரோகித் சர்மா ஆட்டமிழந்த நிலையில், மைதானத்திலேயே கண்கலங்கி அழுதுள்ளார். மிகவும் நொந்து போன நிலையில் சோகம் நிறைந்த முகத்துடன், கண்ணில் நீர் வழிந்தோட ரோகித் சர்மா அதை துடைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






ரசிகர்கள் சோகம்: 


ரோகித் சர்மா கண்கலங்கும் வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். ”ரோகித்தை இப்படி பார்க்க முடியவில்லை, வலுவாக மீண்டும் கம்பேக் கொடுப்பீர்கள், வலிமையாக இருங்கள்” என ஒருதரப்பினர் ரோகித்திற்கு ஆதரவாக பேசி வருகின்றனர். அதேநேரம், “ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரோகித் விளையாடக் கூடாது, இவர் தலைமையில் சென்றால் இந்திய அணி தோற்பது உறுதி, டி-20 உலகக் கோப்பையும் நமக்கு கிடையாது” என ஒருதரப்பினர் ரோகித்திற்கு எதிராகவும் பேசி வருகின்றனர்.