நடப்பு ஐபிஎல் தொடரில் தனது ப்ளேஆஃப் வாய்ப்பினை 90 சதவீதம் இழந்த மும்பை அணியும் ப்ளேஆஃப் ரேசில் தொடர்ந்து நீடிக்கும் ஹைதராபாத் அணியும் 56வது லீக் போட்டியில் மோதிக்கொண்டது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செயத ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்தது. மும்பை அணி சார்பில் பியூஸ் சாவ்லா மற்றும் ஹர்திக் பாண்டியா தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு முதல் ஓவர் சிறப்பாக அமைந்தது. இரண்டாவது ஓவரில் மார்கோ யான்சென் பந்தில் இஷான் கிஷன் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். நான்காவது ஓவரில் ரோகித் சர்மா தனது விக்கெட்டினை பேட் கம்மின்ஸ் பந்தில் இழந்து வெளியேறினார். அடுத்து களத்திற்கு சூர்யகுமார் யாதவ் வந்தார். ஏற்கனவே களத்தில் இருந்த நமன் தீர் தடுமாற்றமான ஆட்டத்தினால் 5வது ஓவரில் முதல் பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இதனால் மும்பை அணி தனது டாப் ஆர்டர் பேட்டிங் வரிசையை இழந்து தவித்து வந்தது.
பவர்ப்ளே முடிவில் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 52 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் மும்பை அணி மேற்கொண்டு ஒரு விக்கெட்டினை இழந்திருந்தாலும் அது ஹைதராபாத் அணிக்கு சாதகமாக அமைந்திருக்கும். ஆனால் சூர்யகுமார் யாதவும் திலக் வர்மாவும் சிறப்பாகவும் பொறுப்பாகவும் விளையாடி மும்பை அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியை சிறப்பாகச் செய்தனர்.
இவர்கள் கூட்டணியைப் பிரிக்க ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸின் ப்ளான்களுக்கு எளிதில் பலன் கிடைக்கவில்லை. சூர்யகுமார் யாதவ் அதிரடியாகவும் திலக் வர்மா பொறுமையாகவும் விளையாடினார். சூர்யகுமார் யாதவ் 30 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டினார். அப்போது அவர் 5 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் பறக்கவிட்டிருந்தார். தொடர்ந்து பொறுமையாக விளையாடி வந்த திலக் வர்மா சூர்யகுமார் யாதவிற்கு ஸ்ட்ரைக் கொடுப்பதில் கவனமாக செயல்பட்டுவந்தார்.
சூர்யகுமார் யாதவ் தனக்கு கிடைத்த பந்துகளை சிக்ஸரும் பவுண்டரியும் விளாசி அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து வந்தார். கடைசி 4 ஓவர்களில் மும்பை அணியின் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சூர்யகுமார் யாதவிற்கு சதத்தினை எட்ட 19 ரன்கள் தேவைப்பட்டது.
இறுதியில் மும்பை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் தனது சதத்தினை எட்டினார். இவர் 51 பந்துகளில் 102 ரன்கள் குவித்தார். சிக்ஸர் விளாசி அணிக்கு வெற்றியை ஈட்டித்தந்ததுடன் தனது சதத்தினையும் எட்டினார்.