நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்கும்போது 17 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரை கவனித்துவரும் கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் தோன்றிய ஒருவிஷயம் என்றால், அது, தோனி, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி என மூன்று ஜாம்பவான்களில் ஒருவர் கூட கேப்டனாக இல்லாமல் அனைவரும் வீரர்களாக களமிறங்குவதுதான்.
இதில் விராட் கோலி வீரராக விளையாடியதும் தோனி தனது கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வழங்கியதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தவில்லை. ஆனால், மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை வீரராக ஸ்டெப் டவுன் செய்து, குஜராத் டைட்டன்ஸில் இருந்து ட்ரேட் செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியாவிடம் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. இது மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
ரசிகர்களின் அதிருப்தி மைதானங்களிலும் வெளிப்பட்டது. இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணி தேர்வு குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரோகித் சர்மாவிடம் ஹர்திக் பாண்டியா கேப்டன்சியின் கீழ் விளையாடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, நான் இதற்கு முன்னர் பல கேப்டன்களின் கீழ் விளையாடியுள்ளேன். இது எனக்கு புதிதான விஷயம் இல்லை. ஒரு கிரிக்கெட் வீரராக எனது வாழ்வின் ஒரு பகுதியாகத்தான் இதனைப் பார்க்கின்றேன். கடந்த ஒரு மாதமாக வீரராக அணிக்கு என்னால் முடிந்த அளவுக்கு உறுதுணையாக விளையாடி வருகின்றேன்” இவ்வாறு கூறினார்.
ரோகித் சர்மாவின் இந்த பதில் அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் இருந்த மும்பை ரசிகர்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியுள்ளது.
ரசிகர்களின் கோபத்திற்கு காரணம் இதுவா?
கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து 2021ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய மிடில் ஆர்டர் அதிரடி பேட்ஸ்மேன் ஹர்திக் பாண்டியா. இடைப்பட்ட காலங்களில் பல ஏலங்கள் வந்தபோது மும்பை அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை வெளியேற்றாமல் தொடர்ந்து தக்கவைத்துகொண்டே இருந்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி 2022ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதால் ஹர்திக் பாண்டியா தானாகவே அணி நிர்வாகத்திடம் பேசி மும்பையில் இருந்து விலகி குஜராத் அணியை வழிநடத்தச் சென்றார். இதற்கு முக்கிய காரணமாக அஷீஷ் நெஹ்ரா செயல்பட்டதாக கூறப்பட்டது. குஜராத் அணிக்குச் சென்றபின்னர், மும்பை அணி குறித்து ஹர்திக் பாண்டியா சர்ச்சையான கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். அதில், மும்பை அணி நிர்வாகம் தலைசிறந்த வீரர்களை விலைக்கு வாங்கி அவர்களை வைத்து கோப்பையை வெல்லும். சென்னை அணி சிறந்த சூழலை அணிக்குள் உருவாக்கி கோப்பையை வெல்லும் என கூறியிருந்தார். இது மும்பை அணி ரசிகர்கள் மத்தியில் கோபத்தை உண்டாக்கியிருந்தது.
ஆனாலும் குஜராத்தில் இருந்து மும்பைக்கு ஹர்திக் பாண்டியா ட்ரேட் செய்யப்பட்டபோது மும்பை ரசிகர்கள் மகிழ்ச்சியாக வாழ்த்துகளைத் தெரிவித்தனர். ஆனால் ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன்சியை ஹர்திக் பாண்டியாவிடம் கொடுத்ததற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும் களத்தில் மும்பை அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை எனவும் கூறப்பட்டது.
இந்த சர்ச்சகைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரோகித் சர்மா பதில் அளித்துள்ளார்.