சென்னையில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த சென்னை அணி 162 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.


ரன் எடுக்க ஓடாத தோனி:


சென்னை அணி முதலில் பேட் செய்தபோது, கடைசி ஓவரில் தோனி – டேரில் மிட்செல் களத்தில் இருந்தனர். ஹர்ஷல் படேல் வீசிய அந்த ஓவரில் தோனி அடித்த முதல் பந்திற்கு, அவர் ரன் எடுக்க ஓடவில்லை. ஆனால், எதிர்முனையில் நின்ற டேரில் மிட்செல் தோனியிடம் வந்துவிட்டு மீண்டும் நான் ஸ்ட்ரைக் முனைக்கே சென்று விட்டார்.


தோனியின் இந்த செயல் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. தோனி நேற்றைய போட்டியில் 11 பந்தில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 14 ரன்கள் எடுத்தாலும் அவரது நேற்றைய செயல் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. எதிர்முனையில் பந்துவீச்சாளர்கள் இருந்தால் கூட தோனியின் செயலை ரசிகர்கள் கண்டித்திருக்க மாட்டார்கள். ஆனால், டேரில் மிட்செல் போன்ற அதிரடி வீரரை வைத்துக் கொண்டு அவருக்கு வாய்ப்பு தராமல் தோனி செயல்பட்டது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


கடுமையாக விமர்சித்த தோனி:


தோனியின் இந்த செயலை இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான் மிக கடுமையாக விமர்சித்துள்ளார். அப்போது, வர்ணணையில் இருந்த பதான், இதை நான் எதிர்க்கிறேன். எதிர்முனையில் உள்ளவரும் விளையாடவே வந்துள்ளார். இது ஒரு அணி விளையாட்டு. அணி விளையாட்டில் இதை செய்ய வேண்டாம். மற்றொரு வீரரும் சர்வதேச வீரர்தான் என்று போட்டி வர்ணனையின்போதே கடுமையாக விமர்சித்தார்.


மேலும், தோனி இந்த பந்தில் ரன் எடுக்காத சூழலில், அதற்கு அடுத்த பந்துகளை தொடர்ச்சியாக சிக்ஸருக்கு விளாசியிருந்தாலும் அவர் அந்த பந்தில் ரன் எடுக்காதது தவறுதான் என்று விமர்சித்துள்ளார். பதானின் இந்த கடுமையான விமர்சனத்திற்கு, தோனி பதானுக்கும் இதேபோல ஒரு முறை செய்ததுதான் காரணம் என்று பலரும் கூறி வருகின்றனர்.


2016ல் நடந்தது என்ன?


2016ம் ஆண்டு கொல்கத்தா அணியும், புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. அந்த போட்டியில் புனே அணியில் தோனியும், இர்ஃபான் பதானும் ஒன்றாக ஆடினர். அந்த போட்டியில் முதலில் பேட் செய்த புனே அணிக்காக 5வது விக்கெட்டுக்காக தோனியும், பதானும் பேட் செய்து கொண்டிருப்பார்கள்.


 






அப்போது, ஃபீல்டர் நோக்கி தோனி பந்தை அடிப்பார். அதற்கு ஒரு ரன் எடுக்கத் தோனி பாதி முனைக்கு வந்துவிடுவார். எதிர்முனையில் நிற்கும் பதான் பந்து ஃபீல்டர் கைக்கு சென்றதால் குழப்பத்திலே கிரீசை விட்டு சற்று முன் தூரத்தில் நின்றுவிடுவார். ஆனால், பாதி தூரம் கடந்த தோனி பதானை பார்த்து ஏதோ சொல்வார். பதானும் ஸ்ட்ரைக்கர் முனைக்கு செல்ல பாதி மைதானம் செல்லும் முன்னே ரன் அவுட் செய்யப்பட்டு விடுவார். இதன் காரணமாகவே பதான் தோனியை நேற்று கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.


தோனி அந்த போட்டியில் 22 பந்துகளில் வெறும் 8 ரன்களே எடுத்தார். பதான் 8 பந்துகளில் 7 ரன்கள் எடுத்தார். அந்த போட்டியில் புனே அணி 17.4 ஓவர்களில் 103 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதையடுத்து, 9 ஓவர்களில் 66 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 5 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. யூசுப் பதான் 18 பந்தில் 37 ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தார். பதான் அவுட்டான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.