ஒவ்வொரு ஐபிஎல் தொடரின்போதும் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்றாக இருப்பது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால் இந்த சீசன் மும்பை அணிக்கு எதிர்பார்த்தவிதமாக இதுவரை அமையவில்லை. மொத்தம் 10 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 3 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில்  மிகவும் பரிதாபமாக உள்ளது. மும்பை அணிக்கு இன்னும் நான்கு போட்டிகள் மீதமுள்ளது.  இதனால் மும்பை அணி மீதமுள்ள நான்கு போட்டிகளில் வெற்றியை எட்டினாலும் அதன் ப்ளே ஆஃப் வாய்ப்பு கிட்டத்தட்ட கைநழுவிவிட்டது என்றே கூறவேண்டும்.

  


தத்தளிக்கும் மும்பை 


ஐபிஎல் தொடரில் ஐந்து முறை கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை மும்பை அணிக்கு பெற்றுத்தந்த ரோகித் சர்மாவிடம் இருந்த கேப்டன் பொறுப்பை ஹர்திக் பாண்டியாவிடம் வழங்கியது மும்பை அணி நிர்வாகம். இது மும்பை அணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் மும்பை அணி நடப்புத் தொடரில் ஹாட்ரிக் தோல்வியைச் சந்தித்த பின்னரே தனது முதல் வெற்றியைப் பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் மோசமான கேப்டன்சிதான் என கூறப்பட்டது.இதனை உறுதிபடுத்தும்விதமாக ஹர்திக் பாண்டியாவின் நடவடிக்கைகளும் களத்தில் அவ்வறே இருந்தது. 




மும்பை அணிக்கு இன்னும் நான்கு லீக் போட்டிகள் மீதமுள்ளது. இதில் இரண்டு போட்டிகள் கொல்கத்தா அணிக்கு எதிராக மும்பை அணி களமிறங்கவுள்ளது. அதேபோல் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஒரு போட்டியிலும் லக்னோ அணிக்கு எதிராக ஒரு போட்டியிலும் விளையாடவுள்ளது. மும்பை அணி அடுத்து எதிர்கொள்ளும் மூன்று அணிகளும் ப்ளே - ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பினைக் கொண்ட அணிகளாக உள்ளது. இந்த அணிகளுக்கு எதிராக மும்பை அணி மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றிபெற்றே ஆகவேண்டும். அவ்வாறு மிகப்பெரிய வெற்றியை எட்டினால் மட்டும்தான் மும்பை அணியால் ப்ளேஆஃப் சுற்றில் நீடிக்க முடியும். அதேபோல் லக்னோ, சென்னை, கொல்கத்தா அணிகள் அடுத்து உள்ள போட்டிகளில் கட்டாயம் தோல்வியைத் தழுவவேண்டும். 


மற்ற அணிகள் செய்ய வேண்டியது என்ன? 


புள்ளிப்பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ள அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி தொடர்ந்து வெற்றியைப் பெற்றுக்கொண்டே இருக்கவேண்டும். இப்படியெல்லாம் நடந்து மும்பை அணி ஒவ்வொரு போட்டியையும் அதிக ரன்கள் வித்தியாசத்திலும் அதிக விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றால் மும்பை அணியால் நடப்புத் தொடரில் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறமுடியும். இல்லை என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளேஆஃப் சுற்றினை மறந்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம். 




மும்பை அணி தனது அடுத்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக வரும் மே 3ஆம் தேதி வான்கடேவில் எதிர்கொள்ளவுள்ளது.