குவாலிஃபையர் 2ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) ஐபிஎல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து, இன்று (மே 28, ஞாயிற்றுக்கிழமை), அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸுடன் (சிஎஸ்கே) மோதுகிறது.
ஐபிஎல் இறுதிப்போட்டி
ஹர்திக் பாண்டியா தனது முன்னாள் அணியான மும்பை அணியை பெரிய ரன் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டியில் தங்களது ஸ்லாட்டை உறுதி செய்தனர். இதனால் மீண்டும் குரு - சிஷ்யன் போட்டி இந்த ஐபிஎல் தொடரின் இறுதியில் உண்டாகியுள்ளது. இம்முறை வென்றால் சென்னை அணிக்கு இது 5வது கோப்பையாக மாறும். இதன் மூலம் அதிக கோப்பைகள் வென்ற மும்பை அணியை சமன் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
கடந்த முறை சாம்பியனான குஜராத் அணி மீண்டும் வென்றால் அந்த அணிக்கு அது இரண்டாவது கோப்பையாக அமையும். அதோடு அந்த அணி உள்ளே வந்ததில் இருந்து, வேறு எந்த அணிக்கும் கோப்பை செல்லாமல் இருக்கும் இரண்டாவது ஆண்டாக இது தொடரும்.
அதிக ஐபிஎல் வென்ற வீரர்
இவை மட்டுமல்ல, தோனிக்கும், ஹர்திக் பாண்டியாவிற்கும் ஒரு மிகப்பெரிய சாதனை செய்யும் வாய்ப்பு இந்த இறுதிப்போட்டியில் காத்திருக்கிறது. இதுவரை அதிக ஐபிஎல் கோப்பைகள் வென்ற அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களின் பட்டியலில் ரோஹித் ஷர்மா முதலிடத்தில் உள்ளார். மும்பை அணியில் ஐந்து கோப்பைகள் உட்பட, டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் 1 கோப்பை என மொத்தம் ஆறு முறை அவர் ஐபிஎல் வென்ற அணியில் ஒரு பகுதியாக இருந்துள்ளார். இம்முறை ஹர்திக் பாண்டியா கோப்பையை வென்றால் அதனை சமன் செய்யும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும்.
ஹர்திக் பாண்டியாவுக்கு உள்ள வாய்ப்பு
2015 ஆம் ஆண்டு முதல் மும்பை அணிக்காக ஆடி வரும் ஹர்திக் பாண்டியா அப்போதிலிருந்து, 2015, 2017, 2019, 2020 என மும்பை வென்ற நான்கு தொடர்களில் ஒரு பகுதியாக இருந்துள்ளார். பின்னர் குஜராத் அணிக்கு கேப்டன் ஆன அவர் அந்த அணிக்கு முதல் தொடரிலேயே கோப்பையை வென்று கொடுத்தார். அதோடு சேர்த்து தற்போது ஐந்து கோப்பைகளை வென்றுள்ளார். ஆனால் இன்று தோனி வென்றால் ஹர்திக் பாண்டியாவை தோனி சமன் செய்வார்.
தோனிக்கு உள்ள வாய்ப்பு
தோனி இதுவரை சென்னை அணிக்காக 4 கோப்பைகளை வென்று கொடுத்திருக்கிறார் (2010, 2011, 2018, 2021). இன்று அவர் வென்றால் ஐந்து கோப்பைகளை வென்று ஹர்திக் பான்டியாவை சமன் செய்வார். இன்றைய போட்டியில் மழைக்கான வாய்ப்புகள் இருந்தாலும் நாளையும் ரிசர்வ் நாள் இருப்பதால், கண்டிப்பாக முடிவை எட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இரு அணிகளும் இந்த சீசனில் இதுவரை இரண்டு போட்டிகளில் மோதியுள்ள நிலையில், ஒன்றில் குஜராத் அணியும், ஒன்றில் சென்னை அணியும் வென்றுள்ளது. இதிலும் இரண்டு அணிகளும் சமமான வாய்ப்புகளையே பெறுகின்றன.