ஐபிஎல் 2023 இன் வெற்றியாளரை அறிய இன்னும் ஒரே ஒரு போட்டிதான் மிச்சம் உள்ளது. குஜராத்தை முதன் முறையாக வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால் குஜராத் மீண்டும் வென்று இறுதிப்போட்டிக்கும் சென்னையை சந்திக்க வந்துள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறும் இந்த போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஐபிஎல் போட்டி பெரும் பொருட்செலவில் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை மகிழ்வித்து வருவது நமக்கு தெரியும். ஆனால் இதனை வெல்லப்பொகும் அணியும், இந்த இறுதிப்போட்டியில் தோற்று இரண்டாம் இடம் பிடிக்கும் அணியும் கோப்பையோடு என்ன பெறுவார்கள் என்று தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்.
வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.20 கோடி
ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணி மற்றும் தோற்கும் அணி மட்டும் அல்ல, பிளே ஆஃப் வந்த அணிகளும் பரிசுகள் பெறுவார்கள். ஐபிஎல் 2023 சீசனில், மொத்த பரிசுத்தொகை 46.5 கோடியாக உள்ளது. ஐபிஎல் 2023 டைட்டிலை வெல்லும் அணிக்கு, பரிசுத் தொகை ரூ. 20 கோடியும், இரண்டாம் இடத்தைப் பிடித்தவர்களுக்கு ரூ. 13 கோடியும் வழங்கப்படும். கூடுதலாக, பிளேஆஃப் சுற்றுக்கு வரும் இரு அணிகளும் தலா ரூ. 7 கோடி மதிப்பிலான பரிசைப் பெறுவார்கள் என்று தெரிகிறது.
பரிசுத்தொகையை உயர்த்த திட்டம்
பல ஆண்டுகளாக, ஐபிஎல் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது, அதன் மதிப்பு 2023 இல் தோராயமாக ரூ.91,000 கோடியாக உயர்ந்துள்ளது. ஊடக உரிமை ஒப்பந்தங்கள் மற்றும் ஸ்பாண்சர்கள் காரணமாக இது இந்த நிலையை அடைந்துள்ளது. ஸ்பான்சர்கள் அதிகமாக வருவதற்கு காரணம் இந்த ஐபிஎல் அடைந்துள்ள உயரம்தான். அதற்கு அந்தந்த அணிகள் மற்றும் வீரர்கள் செயல்படும் விதம் மட்டுமே முழு காரணம். எனவே அவர்களை ஊக்குவித்தல் மட்டுமே இந்த போட்டியை மென்மேலும் உச்சத்திற்கு கொண்டு செல்லும் ஒரே வழி. எனவே அந்த பரிசுத் தொகையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐபிஎல் போட்டிக்கான பரிசுத் தொகையை 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
பரிசுத்தொகை கடந்து வந்த பாதை
ஐபிஎல் வரலாற்றில் பரிசுத் தொகையின் வளர்ச்சியைப் புரிந்து கொள்ள, முந்தைய சீசன்களில் வழங்கப்பட்ட பரிசுத் தொகையை ஆராய்வோம். 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு தொடக்க சீசன்களில் வெற்றி பெற்ற அணிக்கு ரூ 4.8 கோடியும், இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு ரூ 2.4 கோடியும் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பரிசுத் தொகை கணிசமான அதிகரிப்பைக் கண்டது, 2010, 2011, 2012 மற்றும் 2013 சீசன்களில் வெற்றியாளர்கள் ரூ. 10 கோடியும், இரண்டாம் இடம் பிடித்தவர்கள் ரூ. 5 கோடியும் பெற்றனர். 2014 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளில், ஐபிஎல் பரிசுத் தொகையை மேலும் அதிகரித்தது, சாம்பியன்கள் ரூ 15 கோடியும், இரண்டாம் இடம் பிடித்தவர்கள் ரூ 10 கோடியும் பெற்றனர்.
இம்முறை என்னவாக இருக்கும்?
2016 முதல் 2019 வரை, பரிசுத் தொகை வெற்றியாளர்களுக்கு ரூ. 20 கோடியாகவும், இரண்டாம் இடத்தைப் பிடித்தவர்களுக்கு ரூ. 11 கோடியாகவும் இருந்தது. 2020 ஆம் ஆண்டில் பரிசுத் தொகையில் தொற்றுநோய் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியது, அதனால் வெற்றியாளர்களுக்கு ரூ.10 கோடியாகவும், இரண்டாம் இடத்தைப் பிடித்தவர்களுக்கு ரூ.6.25 கோடியாகவும் குறைக்கப்பட்டது. இருப்பினும், 2021 ஆம் ஆண்டு அதிலிருந்து மீண்டு வந்துவிட்ட நிலையில், மீண்டும் சாம்பியன் அணிக்கு பரிசை ரூ. 20 கோடியாக மாற்றினர். 2022 ஆம் ஆண்டில், வெற்றியாளர்கள் ரூ. 20 கோடியும், இரண்டாம் இடத்தைப் பிடித்தவர்களுக்கு ரூ. 13 கோடியும் வழங்கப்பட்டது. இம்முறை இதைவிட உயர்த்தி வழங்கவே திட்டமிடப்பட்டுள்ளது, அந்த உறுதியான தொகை குறித்து இறுதிப்போட்டி முடிந்த பிறகுதான் தெரியவரும். இருப்பினும் இப்போதைக்கு முதல் பரிசு 25 கோடியாக இருக்கலாம் என்று தெரிகிறது. இரண்டாவது பரிசு 15 கோடியில் இருந்து 18 கோடியாக இருக்கலாம் என்றும் தெரிகிறது.
இந்த ஐபிஎல் குறித்த அனைத்து விஷயங்களையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!