ஐபிஎல் 2023 இன் வெற்றியாளரை அறிய இன்னும் ஒரே ஒரு போட்டிதான் மிச்சம் உள்ளது. குஜராத்தை முதன் முறையாக வென்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆனால் குஜராத் மீண்டும் வென்று இறுதிப்போட்டிக்கும் சென்னையை சந்திக்க வந்துள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறும் இந்த போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 


இறுதிப்போட்டி 


10 அணிகளுடன் தொடங்கிய இந்த தொடரில் தற்போது 2 அணிகள் மட்டுமே மிச்சம் உள்ளன. இதில் வெல்லும் அணி பெருமைமிகு கோப்பையை தட்டி செல்லும் என்பதால் ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர். அதுவும் இதில் மிகவும் வலுவான அணியாக உருவாகியுள்ள குஜராத் அணியை சென்னை எதிர்கொள்வதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி வீரர்கள் மற்றும் அவர்களை பயன்படுத்தும் விதங்களிலும் சில ஒற்றுமைகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக மீண்டும் ஒரு குரு - சிஷ்யன் போட்டியை அகமதாபாத்தில் நம்மால் காணமுடியும் என்பது உறுதி. 



யாருக்கு வாய்ப்பு அதிகம்?


இரு அணிகளும் இந்த சீசனில் இதுவரை இரண்டு போட்டிகளில் மோதியுள்ள நிலையில், ஒன்றில் குஜராத் அணியும், ஒன்றில் சென்னை அணியும் வென்றுள்ளது. இதிலும் இரண்டு அணிகளும் சமமான வாய்ப்புகளையே பெறுகின்றன. ஆனால் இந்த முறை நடைபெறும் மைதானம் குஜராத் அணி வென்ற மைதானம் என்பதால் குஜராத் அணிக்கு கூடுதல் சாதகம் உண்டு. குஜராத் அணியின் ஹோம் கிரவுண்ட் என்றாலும் சென்னை அணிக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதால், ருத்துராஜ் சொன்னது போல ஹோம் கிரவுண்ட் பிரச்சனை எல்லாம் வருவதற்கு வாய்பில்லை. ஆனால் மைதான நிலைமைகள் சென்னை அணியை விட குஜராத் அணிக்கு சாதகமாக இருக்கும்.


தொடர்புடைய செய்திகள்: IPL 2023 Prize Money: கோப்பையை வெல்லப்போகும் அணிக்கு இத்தனை கோடியா? 25 சதவிகிதம் உயர்த்த திட்டம்!


முதல் போட்டியும் இறுதிப்போட்டியும்


இந்த ஐபிஎல் சீசனின் வியக்கத்தகு விஷயம் என்னவென்றால், சீசனின் தொடக்கப் போட்டி இதே மைதானத்தில், இதே இரு அணிகளுக்கு இடையே தான் நடைபெற்றது. அதே போல சீசனின் கடைசி போட்டியும் அதே மைதானத்தில் அதே இரு அணிகளுக்கு இடையே நடைபெறுவது சுவாரஸ்யமான ஒன்று. இங்கு நடந்த அந்த முதல் போட்டியை ஒப்பிட்டு பார்த்தால், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 178 ரன்கள் மட்டுமே குவித்து 7 விக்கெட்டுகளை இழந்தது. அதனை 19.2 ஓவர்களில் எளிதாக சேஸ் செய்தது குஜராத் அணி.



இந்த மைதானத்தில் யார் 'கில்'லி?


இதில் குறிப்பிடத்தக்க விஷயம் இந்த போட்டியில் சென்னை அணியின் தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். அதனால் அவர் அதே ஃபார்மை இந்த போட்டியில் தொடர்ந்தால் பெரிய ரன்னை சென்னை அணி குவிக்கும் என்று தெரிகிறது. சேஸிங்கில் குஜராத் அணியின் பேட்டிங் ராட்சஸன் கில் அந்த போட்டியிலும் நன்றாக ஆடி, 36 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். அதுமட்டுமின்றி அவர் இந்த மைதானத்தில் ஆடிய மற்ற போட்டிகளிலும் நன்றாகவே செயல்பட்டுள்ளார். அதனால் அவரது விக்கெட்டை வீழ்த்துவது, சென்னை அணிக்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கும்.


இந்த ஐபிஎல் குறித்த அனைத்து விஷயங்களையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!