ஐ.பி.எல் 2024:
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், அந்த விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் சிகிச்சை பெற்றார். காயம் காரணமாக ஐபிஎல் 2023 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் என பெரிய பெரிய தொடர்களை தவறவிட்ட ரிஷப் பண்ட் எப்பொழுது கம்பேக் கொடுப்பார்? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
இதையடுத்து காயத்திலிருந்து மீண்டுள்ள ரிஷப் பண்ட் இந்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல். தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியானது, அதற்கேற்றவாரே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே ரிஷப் பண்டை தக்கவைப்பதாக அறிவித்தது. இதனால் நிச்சயம் ரிஷப் பண்ட் இந்தாண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. முன்னதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங்கும் ரிஷப் பண்ட் விளையாடுவதை உறுதிபடுத்தினார்.
அதேபோல் இந்த முறை எப்படியும் ஐபிஎல் தொடரில் விளையாடிவிட வேண்டும் என்று பல்வேறு விதமான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் ரிஷப் பண்ட். அவர் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்களை அவ்வப்போது சமூகவலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
வைரல் வீடியோ:
இந்நிலையில் தான் பெங்களூருவில் உள்ள மைதானத்தில் ரிஷப் பண்ட் பயிற்சி மேற்கொண்ட வீடியோ காட்சி ஒன்று சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் பந்து வீச்சாளரின் பந்தை லாவகமாக சிக்ஸருக்கு பறக்க விடுகிறார் ரிஷப் பண்ட். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் இந்த வீடியோவிற்கு தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார்.
அதேபோல், பேட்டிங்கில் மட்டுமே ரிஷப் பண்ட் கவனம் செலுத்துவார் என்றும் விக்கெட் கீப்பிங் செய்வதற்கு வேறு ஒரு வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக, இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் முதல் 21 போட்டிகளின் அட்டவணை அண்மையில் வெளியானது. அதன்படி ஐ.பி.எல் தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோத உள்ளன.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!