நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நாளை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் அனுபவம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. மூன்று ஐபிஎல் பட்டம் வென்ற சென்னை இரண்டு முறை ஐபிஎல் பட்டம் வென்ற கொல்கத்தா அணியை எதிர்த்து விளையாட உள்ளது. நடப்பு தொடரின் முதலாவது குவாலிஃபையர் போட்டியில் சென்னை அணி டெல்லி அணியை வீழ்த்தியது. அப்போது சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடைசி ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசி சென்னை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 


அவரின் அந்த ஆட்டத்திற்கு பிறகு பலரும் அவர் ஃபார்மிற்கு வந்ததாக ட்விட்டரில் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய ட்விட்டர் பதிவில் 'கிரேட்டஸ்ட் ஏவர் ஃபினிசர் இஸ் பேக்' என்று பதிவிட்டிருந்தார். இந்தச் சூழலில் நாளைய இறுதி போட்டியிலும் இவர் சிறப்பான ஃபினிசிங்கை தருவார் என்று சென்னை ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர். 


இந்நிலையில் இதுவரை சென்னை அணிக்காக ஐபிஎல் தொடர்களில் தல தோனியின் வெறித்தனமான அதிரடி ஆட்டங்கள் என்னென்ன?


54*vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்:




2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் அதிக விறு விறுப்பாக இருந்தது. இந்தப் போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்த சென்னை அணிக்கு 29 பந்துகளில் 54 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த தோனி தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக கடைசி ஓவரில் சென்னை அணிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. இர்ஃபான் பதான் வீசிய அந்த ஓவரில் முதல் 4 பந்துகளில் இரண்டு சிக்சர்கள் விளாசி சென்னை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இந்த ஆட்டம் ஐபிஎல் வரலாற்றில் தோனியின் சிறப்பான இன்னிங்ஸாக இடம்பிடித்து விட்டது. 


70* vs பெங்களூரு:




2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 205 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து 206 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 74 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்தப் போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது அணியின் கேப்டன் தோனி பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தார். 34 பந்துகளில் 7 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி உதவியுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் விளாசி சென்னை அணியை வெற்றி பெற செய்தார். இதுவும் தல தோனியின் மாஸ் ஃபினிஷிங் சம்பவங்களில் ஒன்றாக அமைந்தது. 


18* vs டெல்லி கேபிடல்ஸ்:




நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் குவாலிஃபையர் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக சென்னை விளையாடியது. இந்தப் போட்டியில் இரண்டாவதாக விளையாடிய சென்னை அணிக்கு 12 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஆட்டத்தின் 19ஆவது ஓவரின் முதல் பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த தோனி மூன்றாவது பந்தில் ஒரு சிக்சர் விளாசினார். இதைத் தொடர்ந்து கடைசி ஓவரில் சென்னை அணிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது அந்த ஓவரில் சிறப்பாக விளையாடிய தோனி 3 பவுண்டரிகள் விளாசி சென்னை அணியை 9ஆவது முறையாக ஐபிஎல் இறுதி போட்டிக்கு அழைத்து சென்றார். அவரின் அந்த ஆட்டம் பலருக்கும் பழைய தோனியை நியாபக படுத்தியது. அதாவது 40 வயதிலும் தல நினைத்தால் ஃபினிஷிங் செய்ய முடியும் என்பதை அவர் நிரூபித்து காட்டியுள்ளார். 


மேலும் படிக்க:CSK IPL Final Wins: 2010, 2011, 2018 சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஒரு ரீவைண்ட்...!