40 வயதான தோனி இந்த ஐ.பி.எல். கோப்பையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து கேப்டன் தோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதில் மூன்று முறை சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்ற இறுதிப்போட்டியின் விவரத்தை கீழே காணலாம்.
2010ம் ஆண்டு:
முதல் ஐ.பி.எல். போட்டியிலே இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது ஐ.பி.எல். தொடரிலும் இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது.
முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை குவித்தது. சுரேஷ் ரெய்னா அதிகபட்சமாக 35 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 57 ரன்கள் குவித்தார். தோனி 15 பந்தல் 2 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 22 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய மும்பை அணியில் கேப்டன் சச்சின் மட்டும் 48 ரன்கள் எடுத்தார். பொல்லார்ட் 10 பந்தில் 27 ரன்கள் எடுத்தார். அம்பத்தி ராயுடு 21 ரன்கள் எடுத்தார். ஆனாலும், 20 ஓவர்களில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், சென்னை அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
2011ம் ஆண்டு:
2011ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் சென்னை அணி மோதியது. வெட்டோரி தலைமையிலான பெங்களூர் அணிக்கு எதிராக சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் மைக் ஹஸ்ஸியும், முரளி விஜயும் அதிரடியாக ஆடினர். ஹஸ்ஸி 45 பந்தில் 63 ரன்களும், முரளி விஜய் 52 பந்தில் 95 ரன்களையும் அதிரடியாக குவித்தனர். தோனி 13 பந்தில் 2 சிக்ஸருடன் 22 ரன்களை எடுத்தார். இதனால், சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களை எடுத்தது.
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்காக விராட்கோலி 35 ரன்களும், சவ்ரப் திவாரி 42 ரன்களும் எடுத்தனர், பிற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், சென்னை அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முரளி விஜய் ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார்.
2018ம் ஆண்டு:
இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அங்கிள் ஆர்மி என்று விமர்சித்தனர். ஆனால், அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடி தந்து தோனி தலைமையில் மீண்டும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சென்னை. ஹைதராபாத் அணியுடன் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் ஆடிய ஹைதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் 47 ரன்களையும், யூசுப் பதான் 45 ரன்களையும், பிராத்வெய்ட் 21 ரன்களையும் அதிரடியாக எடுத்ததால் அந்த அணி 178 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியின் வெற்றியை வாட்சன் மட்டுமே தனி ஆளாக தேடித்தந்தார். அவர் 57 பந்தில் 117 ரன்களை குவித்தார். சுரேஷ் ரெய்னா 32 ரன்களை எடுத்தார். சென்னை அணி 19வது ஓவரிலே வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை வாட்சன் வெற்றி பெற்றார். சென்னை இதன்மூலம் மூன்றாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்