இந்தாண்டு ஐபிஎல் தொடர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு மிக மோசமான சீசனாக அமைந்தது. தொடரில் இருந்து வெளியேறிய முதல் அணியாக இருந்தது. அணியை ஒற்றை ஆளாக இத்தனை வருடம் தங்கி வந்த வார்னரின் மோசமான ஃபார்மும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்தாண்டு 8 போட்டிகளில் விளையாடிய அவர் 185 ரன்களை மட்டுமே அவர் அடித்துள்ளார். ஆனால் அனுபவ வீரர் என்றும் பாராமல் அவரை பெஞ்சில் உட்காரவைப்பது சரியல்ல என்று ரசிகர்கள் கூறிவந்தனர். அதற்கேற்றார் போல ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வார்னருக்கு பதிலாக ஜேசன் ராய் சேர்க்கப்பட்டார். ப்ளேயிங் 11ல் இருந்து ஒதுக்கப்பட்ட டேவிட் வார்னருக்கு, ஐதராபாத் அணி நிர்வாகம் மேலும் ஒரு அநீதியை இழைத்தது. அதாவது போட்டிகளின் போது வார்னர், ஐதராபாத் அணி வீரர்களுடன் டக் அவுட்டில் கூட அமராமல், ரசிகர்கள் அமரும் இருக்கையில் அமர்ந்து வீரர்களை உற்சாகப்படுத்தினார். இதன் மூலம் பிரச்னை எந்த அளவிற்கு இருந்தது என்பது ரசிகர்களுக்கு புரிந்தது. எனவே இனி ஐதராபாத் அணிக்காக ஐபிஎல்-ல் விளையாடமாட்டார் எனத் தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்த வார்னரும், இனி அணியில் பார்க்க முடியாமல் கூட போகலாம் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அவர் அணியில் இருந்து ஒதுக்கப்பட்டதற்கான காரணங்களாக எதுவும் அதுவரை கூறப்படாததால் விரக்த்தியில் இருந்த அவர் எதையும் வெளியில் பேசாமல் மௌனம் காது இருந்தார். ஆனால் முன்தினம் ஒரு ஆங்கில நாளேடுக்கு கொடுத்த பேட்டியில் உடைந்து போய் தனது மனக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளார்.



அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதற்கான காரணம் தெரிவிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு "என்ன காரணம் என 100 சதவீதம் எனக்குத் தெரியாது. சன்ரைசர்ஸ் நிர்வாகத்தினர் மீதும், பயிற்சியாளர் டிரிவோர் பேலிஸ், லட்சுமண், டாம் மூடி, முரளிதரன் ஆகியோர் மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். ஒரு முடிவு எடுக்கப்படும்போது, அது ஒருமனதாக எடுக்க வேண்டும். ஆனால், எனக்கான மாற்று வீரர் யார், என்னை யார் தேர்வு செய்ய வேண்டும், என்னை யார் விரும்பவில்லை என எதுவுமே எனக்குத் தெரியாது. ஆனால், கடைசி நாளில், நான் விளையாடப் போவதில்லை என்ற தகவல் மட்டும் என்னிடம் கூறப்பட்டது. எனக்கு இது மிகுந்த வேதனையாக இருந்தது. நான் ஏன் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன் என்பதற்கும் விளக்கம் அளிக்கப்படவில்லை. அதற்கான காரணமும் கூறப்படவில்லை. கடந்த காலங்களில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை வைத்து சில விஷயங்கள் தீர்மானிக்கப்படும். அந்த வகையில் நான் சன்ரைசர்ஸ் அணிக்காக 95 போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். ஆனால், 4 போட்டிகளில் மட்டும்தான் மோசமாக விளையாடினேன், 2 முறை ரன் அவுட் ஆகினேன். அதிலும் சென்னை போன்ற மெதுவான, மந்தமான ஆடுகளத்தில்தான் இது நடந்தது. இதுபோன்ற கசப்பான விஷயங்களை ஜீரணிப்பது கடினமானது. ஆனால், நான் ஏன் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டேன் என்பதற்கு விளக்கம் , பதில் இனிமேல் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. ஆதலால் அடுத்த கட்டத்துக்கு நான் நகர்ந்துதான் ஆக வேண்டும். அடுத்துவரக் கூடிய ஐபிஎல் ஏலத்தை நோக்கியிருக்கிறேன். சன்ரைசர்ஸ் அணியை பிரதிநிதித்துவப் படுத்துவதைத் தவிர வேறு எதையும் நான் விரும்பவில்லை, ஆனால் முடிவு உரிமையாளர்களிடம் உள்ளது." என்று மிகவும் வருத்தத்துடன் கூறினார்.



இன்ஸ்டாகிராமில் அணியை விட்டு வெளியேறுவது போன்ற டீவீட்கள் பதிவிட்டதான் பின்னணியை குறித்து, "அணி நிர்வாகத்தால் மீண்டும் ஏலம் எடுக்கப்பட மாட்டீர்கள் என்று சில நேரங்களில் நீங்கள் உணரும் தருணத்தை எதிர்கொள்வீரகள். அதற்கான சின்ன அறிகுறிகள் அணிக்குள் எழுவதைப் பார்ப்போம். என்னுடைய கண்ணோட்டத்தின்படி, சுவரில் எனக்கானது எழுதப்பட்டதை நான் பார்த்துவிட்டேன். ஆதலால் ரசிகர்களுக்கு நன்றி கூற சரியான நேரம் என நினைத்தேன், அந்தப் பதிவைத் தெரிவித்தேன். அடுத்தும் ஐபிஎல் ஏலத்தில் ஏதாவது அணிக்குத் தலைமை ஏற்க அழைத்தால் அதை விருப்பத்துடன் ஏற்பேன். என்னையும், என் விளையாட்டையும் மேலும் சிறப்பாக்கும். கேப்டன் பதவி எப்படி என்பதையும் நான் அனுபவித்துவிட்டேன். சன்ரைசர்ஸ் அணியில் வில்லியம்ஸன், ஜேஸன் ஹோல்டர், ரஷித்கான் ஆகியோருடன் அதிகமாகப் பேசியிருக்கிறேன். கிரிக்கெட்டைப் பற்றி அதிகமாக என்னிடம் பல்வேறு தகவல்களைப் பகிரந்துள்ளார்கள். மீண்டும் கேப்டனாகப் பதவி ஏற்றால் அது த்ரில்லாக இருக்கும். ஆனால், அணி வீரர்கள் எவ்வாறு அமைகிறார்கள் என்பதில் இருக்கிறது. 2022-ம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் விளையாட விரும்புகிறேன். டெல்லி அணியில் என்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, கடைசியாக சன்ரைசர்ஸ் அணியில் முடிந்துவிடக் கூடாது. இன்னும் நீண்டகாலம் இந்த லீக் போட்டியில் விளையாட வேண்டும், ஏராளமான ரன்கள் அடிக்க வேண்டியுள்ளது. தற்சமயத்தில் என்ன வாய்ப்பிருக்கிறதோ அதை எதிர்பார்த்திருக்கிறேன், 100 சதவீதம் பங்களிப்பு செய்வேன்''.