RCB vs RR, IPL 2023: ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் இன்று அதாவது ஏப்ரல் 23ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் பந்து வீச முடிவு செய்தார். 


அதன் படி இந்த போட்டியில் பெங்களூரு அணியை வழிநடத்தும் விராட் கோலி மற்றும் டூ ப்ளசிஸ் களமிறங்கினர்.  ராஜஸ்தான் அணி சார்பில் முதல் ஓவரை போல்ட் வீசினா. முதல் பந்தில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் எல்.பி.டபள்யூ முறையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்து களமிறங்கிய ஷாபாஸ் போல்ட் வீசிய 3வது ஓவரின் முதல் பந்தில் வெளியேற பெங்களூரு அணி 12 ரன்களில் 2 விக்கெட்டுக்ளை இழந்து தத்தளித்து வந்தது. 


இக்கட்டான சூழலில் இறங்கிய மேக்ஸ்வெல் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார். அதன் பின்னர் மேக்ஸ்வெல் மற்றும் டூ பிளஸ்சி பெங்களூரு அணியை தூக்கி நிறுத்தினர். அதிரடியாக விளையாடிய இருவரும் ஐந்து ஓவர்களில் அணியை 50 ரன்கள் எட்டவைத்தனர். மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்ட இவர்கள் ராஜஸ்தான் பந்து வீச்சினை துவம்சம் செய்தனர். குறிப்பிட்டு ஒரு பவுலர் என இல்லாமல் ராஜஸ்தான் பயன்படுத்திய 5 பந்து வீச்சளர்களையும் அடித்து நொறுக்கினர். 


இவர்களது ருத்ரதாண்டவ ஆட்டத்தினால் பெங்களூரு அணி 10 ஓவர்களில் 101 ரன்களை எட்டியது. இக்கட்டான சூழலில் களமிறங்கிய மேக்ஸ் வெல் 27 பந்தில் அரைசதம் எடுக்க, டூபிளசிஸ் 31 பந்தில் அரைசதம் எடுத்தார். இவர்களது பார்ட்னர்ஷிப்பினால் பெங்களூரு அணியின் ரன்வேகம் அசுர வேகத்தில் அதிகரித்தது. இருவரும் நிலைத்து நின்றால் பெங்களூரு அணி 200 ரன்களை 18வது ஓவரிலேயே எட்டி விடும் எனும் அளவிற்கு ஆடினர். ஆனால் இவர்களது பார்ட்னர்ஷிப் 139 ரன்களில் பெங்களூரு இருந்த போது பிரிந்தது. அதன் பின்னர் 44 பந்தில் 77 ரன்கள் சேர்த்த மாக்ஸ்வெல் அஸ்வின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் இணைந்து 6 சிக்ஸர்களும் 14 பவுண்டரிகளும் விளாசி இருந்தனர். 


இதன் பின்னர் பெங்களூரு அணியின் வேகம் குறைந்தது. மேலும் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்ததால், போட்டி ராஜஸ்தான் வசம் வந்தது. இறுதில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி சார்பில் மேக்ஸ்வெல் 77 ரன்களும் டூ பிளசிஸ் 62 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணி சார்பில் போல்ட் மற்றும் சந்தீப் சர்மா தலா  2 விக்கெட்டுகளும், அஸ்வின் சஹால் மற்றும் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.