வார இறுதியான இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொள்கின்றன.  பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 


நேருக்கு நேர்:


ஐபிஎல் தொடரில் இதுவரை 28 முறை இந்த அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், பெங்களூரு அணி 13 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளில் முடிவு எடுதும் எட்டப்பவில்லை. குறிப்பாக சின்னசாமி மைதானத்தில் நடந்த இரு அணிகளுக்கு இடையேயான 9 போட்டிகளில் ராஜஸ்தான் 4 முறையும், பெங்களூரு அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. சின்னசாமி மைதானத்தில் இதுவரை 90 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 43 போட்டிகளில் வெற்றியையும், 42 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது.


நடப்பு தொடரில் இதுவரை:


இன்றைய போட்டியில் வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டி வரும் சூழலில், நடப்பு தொடரில் 4 வெற்றிகளுடன் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலும், 3 வெற்றிகளுடன் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. 


விராட் கோலி கேப்டன்


கடந்த போட்டியைப் போலவே இந்த போட்டியிலும் விராட் கோலியே பெங்களூரு அணியை வழிநடத்துகிறார்.ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு போட்டியில் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடும். அதே போல இந்த வருடம் இந்த போட்டியில்தான் ஆர்சிபி அணி பச்சை நிற ஜெர்சியில் ஆட உள்ளது. பசுமையை முன்னிறுத்தும் வகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கருதி இந்த செயலை அவர்கள் செய்வது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்த ஜெர்சியை அணிந்து 11 முறை ஆர்சிபி அணி ஆடியிருக்கிறது. அதில் வெறும் இரண்டு முறை மட்டுமே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 8 முறை தோல்வியை சந்தித்துள்ளது. ஒரு போட்டி முடிவின்றி கைவிடப்பட்டது. இதனால் ஆர்சிபி இந்த ஜிங்க்ஸை மாற்ற முயற்சிக்கும் என்று தெரிகிறது.


ஏப்ரல் 23


ஜிங்க்ஸில் மற்றொன்று இந்த தேதி. ஏப்ரல் 23 என்பது ஆர்சிபி அணியால் மறக்க முடியாத தேதி. இந்த தேதி அவர்களுக்கு வாழ்கைக்குமான அனுபவத்தை கொடுத்திருக்கிறது. இதே தேதியில் 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோரான 263-ஐ குவித்து சாதனை படைத்தது. இதே தேதியில் 2017 ஆம் ஆண்டு, 49 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, ஐபிஎல் வரலாற்றிலேயே குறைந்த ஸ்கோர் என்ற பெயரை பெற்றது. இதுவரை அந்த ரெகார்டுகள் முறியடிக்கப்படவில்லை. இன்று அதே நாளில் நடக்கும் போட்டியில் இதே போல வித்தியாசமாக ஏதாவது நடக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.