RCB Vs PBKS, IPL 2024: பெங்களூர் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் மோத உள்ள போட்டி, இரவு 7.30 மணிக்கு தர்மசாலாவில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடர் 2024:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 57 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே-ஆஃப் ரேஸ் வேகமெடுத்துள்ளது. நேற்றைய போட்டியின் முடிவின் அடிப்படையில், மும்பை அணி நடப்பு தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது. மீதமுள்ள 9 அணிகளும், பிளே-ஆஃப் சுற்றுக்காக முட்டி மோதி வருகின்றன. இதன் காரணமாக மீதமுள்ள ஒவ்வொரு போட்டிகளின் முடிவும் 9 அணிகளுக்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில், இன்றைய லீக் போட்டியில் டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சாம் கரன் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.
பெங்களூர் - பஞ்சாப் பலப்பரீட்சை:
இமாச்சல பிரதேச மாநிலத்தின் தர்மசாலா பகுதியில் உள்ள மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. பெங்களூர் மற்றும் பஞ்சாப் ஆகிய இரு அணிகளுமே, நடப்பு தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி, தலா 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முறையே 7 மற்றும் 8வது இடங்களில் உள்ளன. பிளே-ஆஃப் வாய்ப்பை நீட்டிக்க இரண்டு அணிகளுக்குமே இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது மிக அவசியமாகும். பெங்களூர் அணி கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் களமிறங்குகிறது. பஞ்சாப் அணி கடைசி போட்டியில் சென்னை அணியுடன் தோல்வியுற்றதால், இன்றைய போட்டி மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்ப முனைப்பு காட்டுகிறது. எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
பலம், பலவீனங்கள்:
உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது பஞ்சாப் அணிக்கு முதல் பலமாக பார்க்கப்படுகிறது. பேர்ஸ்டோ, ஷஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் சர்மா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். சாம் கரன் உள்ளிட்டவர்களும் ரன் சேர்த்தால், அணிக்கு பக்கபலமாக இருக்கும். பந்துவிச்சில் ரன்களை வாரிக் கொடுப்பதை அந்த அணி வீரர்கள் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். பெங்களூர் அணி, கடைசியாக விளையாடிய மூன்று லீக் போட்டிகளிலும் வென்று வலுவான கம்பேக் கொடுத்துள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும், கடந்த போட்டிகளில் செயல்பட்டதை போன்றே, செயல்பட்டால் இன்றைய போட்டியிலும் பெங்களூர் அணியால் வாகை சூட முடியும். அதேநேரம், அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் எவ்வளவும் மோசமாக உள்ளது என்பது, கடந்த போட்டியின் மூலம் அம்பலமானது.எனவே அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியுள்ளது.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் பஞ்சாப் அணி 17 முறையும், பெங்களூர் அணி 15 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
பெங்களூர் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பஞ்சாப் அணி அதிகபட்சமாக 232 ரன்களையும், குறைந்தபட்சமாக 88 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பெங்களூர் அணி அதிகபட்சமாக 226 ரன்களையும், குறைந்தபட்சமாக 84 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
தர்மசாலா மைதானம் எப்படி?
தர்மசாலா மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களால் விரும்பப்படும் மைதானங்களில் ஒன்றாகும். இது வேகம் மற்றும் பவுன்சர்களுக்கு பெயர் பெற்றது. முதலில் பந்துவீசுவதைத் தேர்ந்தெடுத்து, எதிரணியை குறைந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்துவதே சிறந்த முடிவாக இருக்கும்.
உத்தேச அணி விவரங்கள்:
பெங்களூர்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், கரண் ஷர்மா, லாக்கி பெர்குசன், யாஷ் தயாள், முகமது சிராஜ்
பஞ்சாப்: ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், ரிலீ ரோசோவ், சாம் கர்ரன், ஜிதேஷ் சர்மா, ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா, ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா