IPL Records 2024: ஐபிஎல் தொடரில் ஐதராபாத் - லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டியில் படைக்கப்பட்ட சாதனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


லக்னோவை அடித்து நொறுக்கிய ஐதராபாத்:


ஐபிஎல் தொடரில் நேற்றைய லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 165 ரன்களை சேர்த்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய இருவருமே ருத்ர தாண்டவம் ஆடினர். லக்னோ அணியின் பந்துவீச்சை நையப்புடைத்து, சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக விளாசி அதகளம் செய்தனர். இதன் மூலம், வெறும் 9.4 ஓவர்களிலேயே ஐதராபாத் அணி 167 ரன்களை விளாசி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் அபிஷேக் சர்மா மற்றும் ஹெட் சேர்ந்து விளாசிய 14 சிக்சர்கள் மற்றும் 16 பவுண்டரிகளும் அடங்கும். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் ஐதராபாத் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியதோடு, பல்வேறு புதிய சாதனைகளையும் படைத்துள்ளது.


சாதனை பட்டியல்:



  • ஒரு ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்களை விளாசிய அணி என்ற சாதனையை ஐதராபாத் அணி படைத்துள்ளது. நடப்பு தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 146 சிக்சர்களை விளாசியுள்ளது

  • ஒரு ஐபிஎல் தொடரில் பவர்பிளேயில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார் - நடப்பு தொடரில் 24 சிக்சர்கள்

  • ஒரு ஐபிஎல் தொடரில் பவர்பிளேயில் நான்கு முறை அரைசதம் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை டிராவிஸ் ஹெட் படைத்துள்ளார்

  • நேற்றைய போட்டியில் அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் கூட்டணி வெறும் 34 பந்துகளில் 100 ரன்களை குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி வேகமாக எடுத்த 100 ரன்களின் பட்டியலில் இது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

  • ஒரு தொடரில் 20 அல்லது அதற்கு குறைவான பந்துகளில் அதிக அரைசதம் விளாசியவர் என்ற, டெல்லி வீரர் மெக்கர்க்கின் சாதனையை டிராவிஸ் ஹெட் சமன் செய்துள்ளார் - 3 முறை 

  • 16 பந்துகளில் அரைசதம் விளாசிய டிராவிஸ் ஹெட், ஐதராபாத் அணிக்காக வேகமாக அரைசதம் விளாசிய வீரர் என்ற சாதனையை சமன் செய்துள்ளார். அபிஷேக் சர்மாவும் 16 பந்துகளில் அரைசதம் விளாசியது குறிப்பிடத்தக்கது

  • ஐபிஎல் வரலாற்றில் 150-க்கும் அதிகமான ரன்களை அதிவேகமாக சேஸ் செய்த அணி ஐதராபாத்

  • 100+ ரன்களுக்கும் அதிகமான இலக்கை அதிகப்படியான பந்துகளை மீதம் வைத்து சேஸ் செய்த அணி என்ற சாதனையை ஐதராபாத் படைத்துள்ளது. (62 பந்துகள் மீதம்)

  • ஐபிஎல் தொடரில் சேஸிங்கின் போது பவர்பிளேயில் அதிக ரன்களை சேர்த்த அணி ஐதராபாத் - 107 ரன்கள்

  • நேற்றைய போட்டியில் பாண்ட்யா அடித்தது தொடரின் 1000வது சிக்சர் ஆகும். அதுவும் முன் எப்போது இல்லாத அளவிற்கு, வெறும் 13 ஆயிரத்து 79 பந்துகளில் இந்த சாதனை எட்டப்பட்டுள்ளது.