RCB vs PBKS, IPL 2024: பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி, சின்னசாமி மைதானத்தில் இரவும் 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.


ஐபிஎல் தொடர் 2024:


இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 5 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ன. இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் ஃபாப் டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.


பெங்களூர் - பஞ்சாப் மோதல்:


கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஆர்சிபி அணியை தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், இன்றைய போட்டியின் மூலம், நடப்பு தொடரில் வெற்றிக் கணக்கை தொடங்க தீவிரம் காட்டி வருகிறது. மறுபுறம் தனது முதல் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்திய உற்சாகத்தில் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.  போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.


பலம், பலவீனங்கள்:


பெங்களூரு அணியை பொறுத்தவரை அவர்களின் மிக முக்கிய பலமே பேட்டிங் தான். கோலி, டூப்ளெசிஸ், கெயில், தினேஷ் கார்த்திக் மற்றும் கேமரூன் கிரீன் என அதிரடி பேட்ஸ்மேன்கள் பட்டியல் நீள்கிறது. அதேநேரம் பந்துவீச்சில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் யாரும் இல்லாதது பெங்களூரு அணிக்கு முக்கிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. உள்ளூர் மைதானத்தில் போட்டி நடைபெறுவது பெங்களூர் அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. மறுமுனையில் பஞ்சாப் அணியில் இளம் வீரர்கள் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கின்றனர். முதல் போட்டியில் சாம் கரன் அரைசதம் விளாசியது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் ரபாடா, ஹர்ஷல் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட வீரர்கள் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் வல்லமை பெற்றுள்ளனர்.


நேருக்கு நேர்:


ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், பஞ்சாப் அணி 17 முறையும், பெங்களூரு அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளன. பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பெங்களூரு அணி அதிகபட்சமாக 226 ரன்களையும், குறைந்தபட்சமாக 84 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், பெங்களூரு அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பஞ்சாப் அணி அதிகபட்சமாக 232 ரன்களையும், குறைந்தபட்சமாக 88 ரன்களையும் பதிவு செய்துள்ளது.


பெங்களூரு மைதானம் எப்படி?


ரன்மழைக்கு பெயர்போன பெங்களூரு மைதானத்தில் இன்றும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடும். டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே அதிக வாய்ப்புள்ளது. முதலில் பேட்டிங் செய்யும் அணி குறைந்தபட்சம் 200 ரன்களையாவது குவிக்கவிட்டால், வெற்றி என்பது மிக கடினமாகும்.


உத்தேச அணி விவரங்கள்:


பெங்களூரு பிளேயிங் லெவன்: ஃபாப் டூபிளெசிஸ், விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், கர்ண் சர்மா, அல்சாரி ஜோசப், மயங்க் டகர், முகமது சிராஜ்


பஞ்சாப் பிளேயிங் லெவன்: ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ஷஷாங்க் சிங், ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்