ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. இதில் 5வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றியைப் பெற்றது. 


இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டினை இழந்து 168 ரன்கள் சேர்த்தது. மும்பை அணி சார்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும், கோட்ஸீ இரண்டு விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 


அதன் பின்னர் களமிறங்கிய மும்பை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் இஷான் கிஷான் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரில் இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த நமன் தீர் 10 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். 


களத்தில் இருந்த ரோகித் சர்மாவுடன் டேவால்ட் பிரெவிஸ் கைகோர்த்தார். இருவரும் இணைந்து குஜராத் அணியின் பந்து வீச்சினை சின்னாபின்னமாக சிதைத்தனர். குஜராத் அணிக்கு யாரெல்லாம் கைகொடுப்பார்கள் என கருதி கேப்டன் சுப்மன் கில் பந்தைக் கொடுத்தாரோ, அவர்களை எல்லாம் ரோகித் சர்மா டேவால்ட் பிரெவிஸ் கூட்டணி கிழி கிழி என கிழித்தது. 11.1 ஓவரில் மும்பை அணி 100 ரன்களை எட்டியது. 


ரோகித் சர்மா மற்றும் டேவால்ட் பிரெவிஸ் கூட்டணியின் ஆட்டத்தைப் பார்க்கும்போது போட்டி 20 ஓவர்கள் வரை இருக்காது என ரசிகர்கள் மனத்தில் உதிக்க ஆரம்பித்தது. ஆனால் போட்டியின் 13வது ஓவரை வீசிய சாய் கிஷோர் மும்பை அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா விக்கெட்டினை எல்.பி.டபள்யூ முறையில் இழந்து வெளியேறினார். இவர்கள் கூட்டணி 55 பந்தில் 77 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 29 பந்தில் 43 ரன்கள் சேத்திருந்தார். 


அதன் பின்னர் வந்த திலக் வர்மாவும் பிரெவிஸும் நிதாமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். கடைசி ஆறு ஓவர்களில் மும்பை அணியின் வெற்றிக்கு 48 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது. வெற்றிக்கு 40 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தபோது பிரெவிஸ் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். கடைசி இரண்டு ஓவர்களில் மும்பை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 20 ரன்கள் மட்டுமே எடுத்தது. 


இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டினை இழந்து 162 ரன்கள் சேர்த்தது. இதனால் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.