உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தது ஐ.பி.எல் போட்டிகளுக்காகத்தான். அந்தவகையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல் சீசன்17 தொடங்கியது. இதில் 5 போட்டிகள் முடிந்து இன்று (மார்ச் 25) 6 வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது.


இதில், ஃபாப் டூப்ளிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன.


முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப்:


டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக  ஷிகர் தவான் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் களம் இறங்கினார்கள். ஜானி பேர்ஸ்டோவ் எட்டு ரன்களில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த கேட்சை பிடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக கேட்ச் (173) பிடித்த இந்தியர் என்ற பெருமையை பெற்றார். 


மறுபுறம் அதிரடியாக விளையாடிவந்தார் ஷிகர் தவான். அப்போது அவருடன் ஜோடி சேர்ந்தார் பிரப்சிம்ரன் சிங். அந்தவகையில் 17 பந்துகள் களத்தில் நின்ற அவர் 2 சிக்ஸர் 2 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 25 ரன்களை விளாசினார். பின்னர் வந்த லியாம் லிவிங்ஸ்டோன்17 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.






அதிரடி காட்டிய ஷஷாங்க் சிங்:


ஆரம்பத்தில் ஓரளவிற்கு ரன்களை சேர்த்த பஞ்சாப் கிங்ஸ் அணி பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். அந்தவகையில் 37 பந்துகள் களத்தில் நின்ற அவர் 5 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தம் 45 ரன்கள் எடுத்தார். 


பின்னர் சாம் கரண் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார்கள். அப்போது சாம் கரன் விக்கெட்டை பறிகொடுத்து நடையைக்கட்டினார். அதன்படி, சாம் கரண் 17 பந்துகள் களத்தில் நின்று 3 பவுண்டரிகள் உட்பட 23 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக ஜிதேஷ் சர்மாவும் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்படி அவர் 20 பந்துகளில் 27 ரன்களை குவித்தார்.


பின்னர் களம் இறங்கிய ஷஷாங்க் சிங் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  8 பந்துகள் களத்தில் நின்ற அவர் 8 பந்துகளில் 21 ரன்களை குவித்தார். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு மொத்தம் 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களம் இறங்க உள்ளது.