ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி லக்னோவில் உள்ள ஏக்னா சிட்டி மைதானத்தில் 7.30 மணிக்கு தொடங்குகிறது.


பெங்களூரு - லக்னோ மோதல்:


ஐபிஎல் தொடரின் 16வது சீசனின் 43வது ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், டுப்ளெசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. லக்னோவில் உள்ள ஏக்னா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.இந்த போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் நோக்கில் லக்னோ அணியும், நடப்பு தொடரில் ஏற்கனவே இவர்களிடம் பெற்ற தோல்விக்கு பதிலடி தடும் வகையில் பெங்களூரு அணியும் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. இந்நிலையில்  டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 


பெங்களூரு அணியின் பலம், பலவீனம் என்ன?


பெங்களூர் அணியை பொறுத்தவரையில் பேட்டிங்கில் விராட்கோலி அற்புதமான ஃபார்மில் உள்ளார். அவருடன் ஆட்டத்தை தொடங்கும் டுப்ளிசிஸ் பேட்டிங்கில் மிரட்டி வருகிறார். மேக்ஸ்வெல்லும் எதிரணிக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறார். அந்த அணியை பொறுத்தவரையில் இவர்கள் 3 பேர் மட்டுமே பேட்டிங்கில் முதுகெலும்பாக உள்ளனர்.  மிடில் ஆர்டர், டெயிலண்டர்கள் யாரும் பேட்டிங்கில் இதுவரை ஜொலிக்கவில்லை. இளம் வீரர்கள் லோம்ரார், பிரபுதேசாய், அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் மிரட்ட வேண்டியது அவசியம் ஆகும். அதேநேரம், பந்துவீச்சில் முகமது சிராஜ் மட்டுமே இந்த தொடர் தொடங்கியது முதல் சிறப்பாக பந்துவீசி வருகிறார். 


லக்னோ அணியின் பலம், பலவீனம்?


லக்னோ அணியை பொறுத்தவரையில் கே.எல்.ராகுல் இன்னும் தனது முழு திறமையை வெளிப்படுத்தி ஆடவில்லை. அந்த அணியின் பலமாக மேயர்ஸ், ஸ்டோய்னிஸ், பூரண், ஆயுஷ் பதோனி ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக வலுவான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த தொடரில் இரு அணிகளும் மோதிய போட்டியில் ஸ்டோய்னிஸ், பூரண் அதிரடியை இன்னும் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். பெங்களூர் அணி வீரர்கள் இவர்களை கட்டுப்படுத்தினால் மட்டுமே வெற்றியை சாத்தியப்படுத்த முடியும். பந்துவீச்சை பொறுத்தவரையில் பெரியளவில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றே கூறலாம். 


நேருக்கு நேர்:



  • கடந்தாண்டு ஐ.பி.எல். தொடரில் அறிமுகமான லக்னோ அணியும். ஆர்.சி.பி. அணியும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.

  • இதில் லக்னோ அணி 1 முறையும், ஆர்.சி.பி. அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. நடப்பாண்டில் நடைபெற்ற ஒரு போட்டியிலும் லக்னோ அணி வெற்றி பெற்றது.

  • இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் டுப்ளிசிஸ் மொத்தமாக 175 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.