17வது ஐபிஎல் தொடரின் 10வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பின்னர்  நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் பெங்களூரு மைதானத்தில் தனது வெற்றிப்பயணத்தை தொடர்ந்துள்ளது.


இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேய்ஸ் ஐயர் பந்து வீச முடிவு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் சேர்த்தது. இறுதிவரை களத்தில் இருந்த விராட் கோலி 59 பந்தில் நான்கு பவுண்டரி நான்கு சிக்ஸர் விளாசி 83 ரன்கள் குவித்திருந்தார். இறுதியில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 8 பந்தில் மூன்று சிக்ஸர் விளாசி 20 ரன்கள் குவித்து அணிக்கு பெரும் பங்களிப்பை வழங்கினார். 


கொல்கத்தா அணி சார்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிட்ஷெல் ஸ்டார்க் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 8 ஓவர்கள் பந்து வீசி ஒரு விக்கெட் கூட கைப்பற்றாமல், 100 ரன்கள் வாரிக்கொடுத்துள்ளார். 


183 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியின் இன்னிங்ஸை சுனில் நரேன் மற்றும் பிலிப் சால்ட் தொடங்கினர். இருவரும் முதல் ஓவரில் இருந்து பெங்களூரு அணியின் பந்து வீச்சினை துவம்சம் செய்வதில் குறியாக இருந்தனர். குறிப்பாக சுனில் நரேன் இமாலய சிக்ஸரகளை விளாசி பெங்களூரு அணியின் நம்பிக்கையை முற்றிலுமாக சிதைத்தார். இதனால் கொல்கத்தா அணி பவர்ப்ளேவில் விக்கெட் இழப்பின்றி 85 ரன்கள் குவித்தது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பவர்ப்ளேவில் அதிக ரன் குவித்த அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 


பவர்ப்ளேவிற்கு பின்னர் சுனில் நரேனின் விக்கெட்டினை பெங்களூரு அணி கைப்பற்றியது.  இவர் 22 பந்தில் இரண்டு பவுண்டரிகள் ஐந்து சிக்ஸர்கள் உட்பட 47 ரன்கள் குவித்தார். இதனால் சுனில் நரேன் அரைசதம் விளாசுவதைத் தான் தடுக்க முடிந்ததே தவிர, கொல்கத்தா அணியின் வெற்றியை தடுக்க உதவவில்லை. அதேபோல் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பிலிப் சால்ட் தனது விக்கெட்டினை 30 ரன்கள் சேர்த்தபோது இழந்தார். 


அதன் பின்னர் இணைந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி கொல்கத்தா அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். வெங்கடேஷ்  ஐயர் 29 பந்தில் தனது அரைசதத்தினை பூர்த்தி செய்த நிலையில், 30 வது பந்தில் தனது விக்கெட்டினை இழந்தார். 


இறுதியில் கொல்கத்தா அணி 16.5  ஓவர்களில் விக்கெட்டுகளை 3 இழந்து 186 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் சொந்த மைதானத்தில் தோல்வியைத் தழுவிய முதல் அணி என்ற நிலைக்கு ஆளாகியுள்ளது.