17வது ஐபிஎல் தொடரின் 10வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேய்ஸ் ஐயர் பந்து வீச முடிவு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் சேர்த்தது.
பெங்களூரு அணியின் இன்னிங்ஸை விராட் கோலி மற்றும் கேப்டன் டு பிளெசி ஆகியோர் தொடங்கினர். போட்டியின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி பெங்களூரு அணிக்கு நம்பிக்கையான தொடக்கத்தை விராட் கோலி ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால் கேப்டன் டு பிளெசி அதிரடியான ஆட்டத்தினை தொடங்கி அடுத்த சில பந்துகளில் தனது விக்கெட்டினை இழந்தார். போட்டியின் இரண்டாவது ஓவரில் தனது விக்கெட்டினை 8 ரன்களில் இழந்து வெளியேறினார்.
அதன் பின்னர் வந்த கேமரூன் கிரீன், விராட் கோலியுடன் இணைந்து கொல்கத்தா அணியின் பந்து வீச்சினை பவர்ப்ளேவில் சிதைக்கும் பணியில் ஈடுபட்டார். இருவரும் மாறி மாறி பவுண்டரிகளை விளாசுவதில் கவனம் செலுத்தினர். இதனால் பெங்களூரு அணி பவர்ப்ளே முடிவில் 61 ரன்கள் சேர்த்திருந்தது. பவர்ப்ளேவில் மட்டும் பெங்களூரு அணி 6 பவுண்டரி மூன்று சிக்ஸர் விளாசினார்.
அதன் பின்னர் அடுத்த மூன்று ஓவர்களை கச்சிதமாக கொல்கத்தா அணி வீச பெங்களூரு அணியின் ரன்ரேட் குறைய ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் கேமரூன் க்ரீன் அதிரடி ஆட்டத்தில் கவனம் செலுத்தி தனது விக்கெட்டினை ரஸல் பந்தில் இழந்து வெளியேறினார். இதையடுத்து களத்திற்கு வந்த மேக்ஸ் வெல் தொடக்கத்தில் தடுமாற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். கொல்கத்தா வீரர்களும் மேக்ஸ்வெல்லின் இரண்டு கேட்ச் வாய்ப்புகளை வீணடிக்க, அதனைப் பயன்படுத்தி மேக்ஸ்வெல்லால் இரண்டு, மூன்று பவுண்டரிகள்தான் விளாச முடிந்ததே தவிர, ஆட்டத்தில் தாக்கத்தினை ஏற்படுத்த முடியவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் தனது விக்கெட்டினை 15வது ஓவரின் முதல் பந்தில் தனது விக்கெட்டினை 19 பந்தில் மூன்று பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசிய 28 ரன்கள் சேர்த்த நிலையில் சுனில் நரேன் பந்தில் வெளியேறினார்.
இதற்கிடையில் விராட் கோலி 36 பந்தில் தனது அரைசதத்தினை பூர்த்தி செய்திருந்தார். இதன் மூலம் ஆரஞ்சு தொப்பியையும் மீண்டும் தன்வசப்படுத்தினார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டினை இழந்து 182 ரன்கள் சேர்த்தது. இறுதிவரை களத்தில் இருந்த விராட் கோலி 59 பந்தில் நான்கு பவுண்டரி நான்கு சிக்ஸர் விளாசி 83 ரன்கள் குவித்திருந்தார். இறுதியில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 8 பந்தில் மூன்று சிக்ஸர் விளாசி 20 ரன்கள் குவித்து அணிக்கு பெரும் பங்களிப்பை வழங்கினார்.