சென்னை மற்றும் பெங்களூரு விளையாடும் போட்டியை பார்க்க ஆசைப்பட்டு மோசடி பேர்வழிகளிடம் ரூபாய் 3 லட்சம் வரை இழந்துள்ளார் இளைஞர் ஒருவர்.


ஐபிஎல் 2024:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிவிட்டது.


கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மட்டுமே தற்போது ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இரண்டு மற்றும் மூன்றாம் இடத்திற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதுகின்றன. 


அந்தவகையில் மே 18 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் 68 வது லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த போட்டி இரண்டு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டியாக இருக்கிறது. 


மோசடியில் சிக்கிய இளைஞர்:


இந்நிலையில் தான் இந்த போட்டிக்கான ஐபிஎல் டிக்கெட் வாங்க முயன்ற இளைஞர் ஒருவரிடம் மோசடி செய்யப்பட்டிருக்கிறது. அதாவது இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றில் சென்னை - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி டிக்கெட் கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.


அதை நம்பிய பெங்களூருவைச் சேர்ந்த விஜய் குமார் என்ற இளைஞரிடம் பத்மா சின்ஹா என்ற நபர் பேசியிருக்கிறார். அதன்படி ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 2,300 என்று கூறியிருக்கிறார் அந்த மோசடி பேர்வழி. இதனை நம்பிய விஜய குமார் மூன்று டிக்கெட்டுகளுக்கான தொகையாக ரூபாய் 7,900 செலுத்தி இருக்கிறார்.


ஆனால் கடைசி வரை போட்டிக்கான டிக்கெட்டை அந்த இளைஞர் பெறவில்லை. தொடர்ந்து டிக்கெட் எனக்கு கிடைக்கப்பெறவில்லை என்று பத்மா சின்ஹாவிடம் கூறியிருக்கிறார். அதற்கு பதிலளித்த அந்த மோசடி பேர்வழி பத்மா சின்ஹா தொழில் நுட்பக்கோளாறு காரணமாகத்தான் டிக்கெட் உங்களுக்கு  வரவில்லை . மேலும் 67,000 ரூபாய் அனுப்புங்கள் என்று கூறி தொடர்ந்து அவரிடம் அதைப்போல் 3 லட்சம் வரை பெற்றிருக்கிறார். 


காவல் துறை வேண்டுகோள்:


கடைசியாக தான் 3 லட்சம் ரூபாய் பணத்தை மோசடியால் ஏமாந்தததை உணர்ந்த விஜய் குமார் காவல் நிலையத்தை நாடியிருக்கிறார். ஐபிசி பிரிவு 420ன் கீழ் பெங்களூரு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும் இது போன்ற ஆன்லைன் மோசடிகளை யாரும் நம்பி பணம் செலுத்த வேண்டாம் என்று காவல் துறை சார்பில் ரசிகர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!


 


மேலும் படிக்க: Riyan Parag: அடேங்கப்பா..ரோகித் சர்மா, ரிஷப் பண்டுக்கு அப்புறம் இப்டி ஒரு சாதனையா; அசத்தும் ரியான் பராக்!