RCB Vs CSK: நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி, பிளே-ஆஃப் செல்ல, யாஷ் தயாள், மேக்ஸ்வெல் மற்றும் கிரீன் ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர்.
பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற பெங்களூர் அணி:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் முதலில் விளையாடிய 8 போட்டிகளில், ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக வலுவான கம்பேக் கொடுத்து, அதுவும் இறுதி லீக் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி தற்போது பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இது அந்த அணியின் கூட்டு முயற்சியால் நிகழ்ந்தி ஒரு அபரிவிதமான மேஜிக் ஆகும். அதேநேரம், ஆரம்பகட்டங்களில் அணியின் தொடர் தோல்விகளுக்கு காரணமாக இருந்த 3 வீரர்கள் தான், பெரும் அழுத்தத்திற்கு மத்தியிலான சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற முக்கிய பங்காற்றியுள்ளனர்.
கிளென் மேக்ஸ்வெல்:
கோலி- கிளெயின் மேக்ஸ்வெல் - ஃபாப் டூப்ளெசிஸ் ஆகியோர் தான், பெங்களூர் அணியின் பேட்டிங் தூண்களாக கருதப்படுகின்றனர். அவர்களை ஆர்சிபி ரசிகர்கள் கே.ஜி.எஃப் என வர்ணிக்கின்றனர். ஆனால், நடப்பு தொடரில் முதல் பாதியில் மேக்ஸ்வெல் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்தடுத்து டக்-அவுட்டும் ஆக, தற்காலிகமாக சில போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் தான் நேற்றைய போட்டியில் கடைசி கட்டத்தில் களமிறங்கிய மேக்ஸ்வெல், 5 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என 16 ரன்கள் விளாசி அதிரடி காட்டினார். ஆர்சிபி அணி பந்துவீச வந்தபோது, முதல் ஓவரின் முதல் பந்திலேயே சென்னை அணி கேப்டன் கெய்க்வாட்டை, மேக்ஸ்வெல் ஆட்டமிழக்கச் செய்தார். அதோடு 4 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தி, 25 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து பெங்களூர் அணியின் வெற்றிக்கு மேக்ஸ்வெல் பெரும்பங்காற்றினார்.
கேமரூன் கிரீன்:
மும்பை அணிக்காக கடந்த சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன், 10.5 கோடி ரூபாய் மதிப்பில் பெங்களூர் அணிக்காக இந்த சீசனில் டிரேட் செய்யப்பட்டார். ஆனால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே எதிர்பார்த்த அளவில் கேமரூன் கிரீன் செயல்படவில்லை. இதனால், பெரும் தொகைக்கு வாங்கி இருந்தாலும் கிரீனும் பென்ச்சில் அமரவைக்கப்பட்டார். இந்த நிலையில் தான், நேற்றைய போடியில் 17 பந்துகளை எதிர்கொண்டு, தலா 3 பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசி 38 ரன்களை சேர்த்தார். அதோடு, அபாயகரமான பேட்ஸ்மேன் ஆக கருதப்படும் ஷிவம் துபேவையும் தனது பந்துவீச்சில் ஆட்டமிழக்கச் செய்து, பெங்களூர் அணியின் வெற்றிக்கு கேமரூன் கிரீன் பங்காற்றியுள்ளார்.
யாஷ் தயாள்:
கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடிய யாஷ் தயாள், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 5 பந்துகளில் 29 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் அணியின் தோல்விக்கு காரணமானார். இந்நிலையில் நடப்பு தொடரில் பெங்களூர் அணியில் இணைந்தார். ஆரம்பத்தில் ஒரு சில போட்டிகளில் நல்ல ரன்ரேட்டில் பந்துவீசினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் ரன்களை வாரிக் கொடுத்தார். இந்நிலையில் தான், நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் சென்னை அணியை, 16 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற சூழலில் யாஷ் தயாள் பந்து வீசினார். முதல் பந்திலேயே தோனி சிக்ஸ் அடிக்க, பெரும்பாலான ஆர்சிபி ரசிகர்கள் யாஷ் தயாளை திட்ட தொடங்கிவிட்டனர். ஆனால், எந்த அழுத்தத்தையும் மனிதில் ஏற்றிக்கொள்ளாமல், அடுத்த பந்திலேயே தோனியை ஆட்டமிழக்கச் செய்ததோடு, கடைசி நான்கு பந்தில் ஒரு ரன்னை மட்டுமே விட்டுக் கொடுத்து, சென்னை அணியை வெற்றி பெறச்செய்தார். இதனை பாராட்டும் விதமாகவே, தனக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை, யாஷ் தயாளுக்கு வழங்குவதாக கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் தெரிவித்தார்.