IPL 2023, LSG vs SRH ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
லக்னோ தடுமாற்றம்:
லக்னோவின் ஏக்னா சிட்டி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணி நிர்ணயித்த 127 ரன்கள், என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. அதிரடி ஆட்டக்காரரான கைல் மேயர்ஸ் இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து சரிந்த விக்கெட்:
அவரை தொடர்ந்து வந்த க்ருணால் பாண்ட்யா 14 ரன்களிலும், பதோனி 4 ரன்களிலும், தீபக் ஹூடா ஒரு ரன்னிலும், நிக்கோலஸ் பூரான் 9 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், 38 ரன்களை சேர்ப்பதற்குள் லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சற்றே நிதானமாக விளையாடி வந்த ஸ்டோய்னிஷ் 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார். சற்றே அதிரடியாக விளையாடி வந்த கவுதம் 23 ரன்களில் ரன் - அவுட்டானார்.
பெங்களூரு வெற்றி:
சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததை தொடர்ந்து, 19.5 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்ஸ் விவரம்:
நடப்பு தொடரில் ஏற்கனவே இந்த இரு அணிகளும் மோதிய போட்டியில், லக்னோ அணி த்ரில் வெற்றி பெற்று இருந்தது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ள பெங்களூரு அணியும், இன்றைய போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் நோக்கில் லக்னோ அணியும் இன்றைய போட்டியில் களமிறங்கின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
டூப்ளெசிஸ் - கோலி நிதான ஆட்டம்:
பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டூப்ளெசிஸ் மற்றும் கோலி களமிறங்கினார். மைதானம் முழுமையாக சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்ததால், இருவருமே அதிரடியாக ரன் சேர்க்க முடியாமல் திணறினார். இருப்பினும் இந்த கூட்டணி பொறுப்புடன் விளையாடி முதல் வி க்கெட்டிற்கு 62 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து கோலி 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து விக்கெட்:
அவரை தொடர்ந்து வந்த ராவத் 9 ரன்களில் நடையை கட்டினார். இதையடுத்து வந்த மேக்ஸ்வெல்லும் வெறும் 4 ரன்களை சேர்த்து அட்டமிழந்தார். 5வது விக்கெட்டிற்கு களமிறங்கிய பிரபுதேசாய், மிஸ்ரா பந்துவீச்சில் வெறும் 6 ரன்களுக்கு நடையை கட்டினர். இவ்வாறு அடுத்தடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், மறுமுனையில் கேப்டன் டூப்ளெசி நிலைத்து நின்று ரன் சேர்த்தார். இதனிடையே, மழை குறுக்கிட்டதால் சுமார் 25 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்டது.
டூப்ளெசி அவுட்:
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டூப்ளெசி 44 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து லோம்ரோரும் 3 ரன்களில் நடையை கட்டினார். சற்றே நிலைத்து நின்று ஆடிய தினேஷ் கார்த்திக் 16 ரன்களை மட்டுமே சேர்த்து ரன் - அவுட்டானார்.
லக்னோ அணியின் இலக்கு:
சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததை தொடர்ந்து பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை சேர்த்தது. இந்த இலக்கை எட்டா முடியாமல் லக்னோ அணி வெறும் 108 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.