ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற உள்ள பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான, போட்டியின் முடிவுகள் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதில் முக்கிய பங்காற்ற உள்ளது. அந்த சாத்தியக்கூறுகளை இந்த தொகுப்பில் அறியலாம்.


பெங்களூரு - ஐதராபாத் மோதல்:


நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பிளே-ஆஃப் சுற்றை நெருங்கி வரும் நிலையில், இன்று நடைபெற உள்ள முக்கியமான லீக் போட்டியில் பெங்களுரு மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. 12 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி தலா 6 வெற்றி மற்றும் தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் நீடிக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே, பிளே ஆஃப் சுற்றிற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும். இதனால், இன்றைய போட்டியில் வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் பெங்களூரு அணி களமிறங்குகிறது. மறுமுனையில் ஐதராபாத் அணியை பொறுத்தவரையில் 12 போட்டிகளில் விளையாடி நான்கில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளதால், ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. அதேநேரம், உள்ளூர் மைதானங்களில் விளையாட உள்ள கடைசி இரண்டு போட்டிகளிலும், ஆறுதல் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறது.


சென்னை அணியின் நிலவரம்:


கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி மற்றும் ஒரு டிராவுடன், 15 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. ஆனாலும், சென்னை அணி தனது பிளே-ஆஃப் வாய்ப்பை இன்னும் உறுதி செய்யவில்லை. மீதமுள்ள ஒரு போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக அதன் சொந்த மைதானத்தில் சென்னை அணி விளையாட உள்ளது. 


சென்னை அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு:


இதனிடையே, இன்று நடைபெற உள்ள லீக் போட்டியில் ஒருவேளை பெங்களூரு அணி தோல்வியுற்றால், சென்னை அணி பிளே-ஆஃப் சுற்றிற்கு செல்வது உறுதியாகிவிடும். ஒரு வேளை பெங்களூரு அணி வெற்றி பெற்றால், அடுத்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். அந்த போட்டியில் சென்னை அணி தோற்றுவிட்டால், பிளே-ஆஃப் வாய்ப்பிற்காக போராடிக்கொண்டிருக்கும் மும்பை, லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய அணிகளின் வெற்றி தோல்வி தான் சென்னையின் விதியை தீர்மானிக்கும். இதனால், இன்றைய போட்டியின் முடிவு சென்னை அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.


ரசிகர்கள் குழப்பம்:


இதனிடையே, சென்னையில் நடைபெற உள்ள குவாலிபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள், இன்று நண்பகல் 12 மணியளவில் ஆன்லைனில் தொடங்கியது. ஆனால், சென்னை அணியின் பிளே ஆஃப் சுற்றில், குவாலிபையர் போட்டியில் விளையாடுமா அல்லது எலிமினேட்டர் சுற்றில் விளையாடுமா என்பது இதுவரை உறுதியாகவில்லை. இதனால், எந்த போட்டிக்கான டிக்கெட்டை வாங்குவது என்பதில் சென்னை ரசிகர்களிடையே, கடும் குழப்பம் நிலவி வருகிறது.