IPL 2023, SRH vs RCB: இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏதோ நேற்று முன்தினம் தொடங்கியதைப் போல் இருக்கிறது. ஆனால் இந்த வார இறுதியில் லீக் போட்டிகள் முற்றிலும் முடிவடையவுள்ளது. களமிறங்கிய 10 அணிகளில் ஏற்கனவே இரண்டு அணிகள் அதிகாரப்பூர்வமாக ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பினை இழந்து விட்டன. டெல்லி மற்றும் ஹைதராபாத்தான் அந்த இரண்டு அணிகள். அதேபோல் ப்ளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டும் தான் இதுவரை தகுதி பெற்றுள்ள ஒரே அணி. மற்ற அணிகள் எல்லாம் இழுபறியில் தான் உள்ளன.
இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் 12 புள்ளிகளுடன் உள்ள பெங்களூரு அணி இன்று ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. ஹைதராபாத் அணியைப் பொறுத்த மட்டில் இந்த போட்டியில் வென்றாலும் தோற்றாலும் பெரிய மாற்றம் உருவாகிடாது. ஆனால் பெங்களூரு அணிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமான போட்டியாகும். இந்த போட்டியில் வென்றால்தான் ப்ளேஆஃப் வாய்ப்பில் நீடிக்க முடியும். ஒருவேளை இந்த போட்டியில் பெங்களூரு அணி தோற்றால், மற்ற போட்டிகளின் முடிவுகளுக்கு காத்திருப்பதுடன், குஜராத்துடனான போட்டியினையும் வெல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகும்.
ஐபிஎல் வரலாற்றில், இரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் ஹைதராபாத்தின் கரங்கள்தான் ஓங்கியுள்ளது. ஹைதராபாத் அணி இதுவரை 12 போட்டிகளிலும் பெங்களூரு அணி 9 போட்டிகளிலும் வென்றுள்ளது. மேலும், இன்றைய போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. ஹைதராபாத் அணியைப் பொறுத்தமட்டில் இந்த போட்டி உள்ளூரில் நடப்பதால் வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கின்றது. மேலும் தொடரில் இருந்து வெளியேறிவிட்டதால் எந்தவிதமான அழுத்தங்களும் இல்லாமல் விளையாட முடியும் என்பதால் அவர்கள் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது. மேலும் பெங்களூரு அணியைப் பொறுத்தமட்டில் இந்த போட்டியில் கட்டாயம் வென்றாகவேண்டும் என்ற நெருக்கடியில் ஆடுவார்கள் என்பதால் களத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்த போட்டியினை ஜியோ சினிமா தளத்திலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் நேரலையாக காணலாம்.
கணிக்கப்பட்ட அணிகள்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அன்மோல்பிரீத் சிங், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, உம்ரான் மாலிக், ஃபசல்ஹக் ஃபரூக்கி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், வெய்ன் பார்னெல், கர்ன் சர்மா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்